Published : 24 Oct 2023 12:18 PM
Last Updated : 24 Oct 2023 12:18 PM

''தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவதா?'' - மு.க. ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: "29 மாதகால திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக முதல்வர் மக்களிடையே பொய் பேசுகிறார். ஏனெனில், 29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர், பொம்மை முதல்வர் ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட பணிகளைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல், அவருடைய பேச்சில், பாதிக்கும் மேல் என்னைப் பற்றி பேசியதில் இருந்தே, அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது நன்கு விளங்குகிறது.

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் பேசும்போது, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகத் தம்பட்டம் அடித்தார். அதனால்தான், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அவற்றின் நிலை என்ன என்று நான் கேட்டேன். மேலும், கடந்த 29 மாத கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் பாதிப்புகளை நீக்க திமுக அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சட்டமன்றத்திலும், ஊடகங்களிலும் கூறி வருகிறேன்.

அதிமுக அரசில் தொடங்கப்பட்டு, தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சில முக்கியத் திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன மானியம், பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்தும், மாநில நிதியில் செயல்படுத்தப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டம் உட்பட ஓராண்டுக்குள் நிறைவேற்றி இருக்கக்கூடிய பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் இன்றுவரை இழுத்தடித்துக் கொண்டிருப்பது என்று தமிழக மக்களிடையே பெரும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

மேலும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இருமுறை மின் கட்டண உயர்வு; சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு; குடிநீர் மற்றும் கழிவு நீர் கட்டண உயர்வு; பால் பொருட்கள் விலை உயர்வு; அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு; நில வழிகாட்டி மதிப்பு உயர்வு; பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு என்று தமிழக மக்கள் அனைவரது தினசரி வாழ்வையே புரட்டிப் போட்ட நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற 29 மாத கால ஆட்சியில் நிர்வாக ரீதியாக படுதோல்வியை சந்தித்து மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியதை நான் ஒவ்வொரு முறையும் எடுத்துரைக்கிறேன். இதற்கு ஸ்டாலின் அவர்களின் பதில் என்ன?

அடுத்து, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; அதிகரித்து வரும் போதை கலாச்சாரம்; போதைப் பொருள் விற்பனை; 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் அதிக அளவு போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக சீர்கேடு; தமிழகமெங்கும் சர்வ சாதாரணமாக கூலிப் படையினர் போட்டி போட்டுக்கொண்டு, பொது வெளியில் கொடூர ஆயுதங்களால் கொலை செய்தல்; வழிப்பறி; நகை பறிப்பு; திமுக நிர்வாகிகள் காவல் துறையினரை மிரட்டுதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொழில் துறையினரை மிரட்டும் வீடியோக்கள்; நில அபகரிப்பு; தனியாக வசிக்கும் முதியவர்கள் கொடூரமாகத் தாக்கப்படுதல், கொலை செய்யப்படுதல் மற்றும் அவர்களது சொத்துக்களை கொள்ளையடிப்பது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் ஆகிவிட்டன. தமிழக மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தவறிய தமிழகக் காவல்துறை இதற்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன?

அதிமுக ஆட்சியில் 2020-2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 32. ஆனால், திமுக ஆட்சியில் 2022-2023-ல் 52-ஆக உயர்ந்து, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது இந்த திமுக அரசு. காவல்துறை அத்துமீறல் பற்றிப் பேசியுள்ளார். திமுக ஆட்சியில் விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்படுபவர்கள் ‘லாக் அப் டெத் நிகழ்வுகள்’ மூலம் பலியாகி வருவதை ஸ்டாலின் வசதியாக மறந்துவிட்டார். துப்பாக்கிச் சூடு பற்றி பேசியுள்ளார். திமுக ஆட்சியில் விவசாயிகள் பம்ப்செட் மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தியபோது, போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றது திமுக அரசு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கியது அதிமுக அரசு.

பாஜகவிடம் தமிழகத்தின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துள்ளதாகப் பேசியுள்ளார். ஆனால், 1999-ம் ஆண்டு, ஆட்சி அதிகாரத்துக்காக 5 ஆண்டுகள் பாஜகவின் அடிமையாக திமுகதான் இருந்துள்ளது என்பதற்கு என்ன பதில் கூறப்போகிறார். மேலும், 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் மைனாரிட்டி திமுக அரசு, ஆட்சி அதிகாரித்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு அச்சாரமிட்டதை ஸ்டாலின் வசதியாக மறந்துவிட்டாரா?

திமுக நிர்வாகிகளின் எல்லை மீறிய தவறுகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது, தவறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று சினிமா வசனம் பேசி 18 மாதங்களுக்கு மேல் ஆகிறது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்களின் மக்கள் விரோதச் செயல்கள்; அதிகார அத்துமீறல்கள் நடந்துகொண்டுதான் உள்ளது. ஆனால், ஸ்டாலின்தான் இன்னும் சர்வாதிகாரியாக மாறவில்லை.

மகளிர் இருசக்கர வாகன மானியத் திட்டம்; தாலிக்குத் தங்கம் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவிட்டு, அந்நிதியைக் கொண்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கியுள்ளார். அதையும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு அனைத்து குடும்பப் பெண்களுக்கும் வழங்கவில்லை. பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால் பாதிக்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை.

அதுபோலவே, 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெற்று வரும் 1,000 ரூபாய் ஓய்வூதிய உதவித் தொகையை, 1,200 ஆக உயர்த்தி வழங்குவதாக பெருமை பேசியுள்ளார். ஆனால், தேர்தல் வாக்குறுதியில் முதியோர் ஓய்வூதியம் ரூ. 1,000-த்திலிருந்து ரூ. 1,500-ஆக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். பாதி ஆட்சிக் காலமே முடிவடைந்துவிட்டது. ஆனால், இன்னும் முதியோர் ஓய்வூதியம் 1,500-ஆக உயர்த்தப்படவில்லை.

மாணாக்கர்களுக்கு காலை உணவுத் திட்டம் திமுகவுக்கு சொந்தம் கொண்டாடுகிறார். ஆனால், முதற்கட்டமாக எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட மாணாக்கர்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. தொடர்ந்து கரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் நடுவில் இத்திட்டம் தொடரப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இத்திட்டதின் பெயரை தற்போது மாற்றி, விரிவுபடுத்தி உள்ளார் ஸ்டாலின்.

5 பவுன் வரை அனைத்து நகைக் கடன்களும் ரத்து என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின், உதயநிதியின், தேர்தல் பேச்சை நம்பி 2019-ம் ஆண்டு முதல் சுமார் 48 லட்சம் மகளிர் தங்கள் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் வைத்து கடன் பெற்றனர். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வெறும் 13 லட்சம் பேருக்கு மட்டும் நகைக் கடன் ரத்து என்று அறிவித்த, போலி வேடம் புனைந்த ஸ்டாலினுக்கும் மற்றும் அவரது இளவலுக்கும், மீதமுள்ள லட்சக்கணக்கான பெண்கள் அக்கடனுக்காக வட்டி கட்ட முடியாமல், நகையை மீட்க முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளானது தெரியுமா?

கடந்த 29 மாதகால திமுக ஆட்சியில், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களைத்தான் நீங்கள் ரிப்பன் கட்டி தொடங்கி வைத்துள்ளீர்கள் என்று நான் கூறினேன். இல்லையென்று நீங்கள் கூற முடியுமா? எங்களது மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டு, அதனுடைய நிதியைக் கொண்டு வேறு பெயர் வைத்து அழைத்தால் அது உண்மையாகிவிடுமா?

29 மாத கால ஆட்சியில், இதுவரை ஒரு புதிய பேருந்தைக்கூட வாங்காத, வாங்கத் திராணியற்ற அரசுதான் திமுக அரசு. மேலும், தற்போது இருக்கும் பேருந்துகளில் சுமார் 40 சதவீதத்துக்கும் மேல் ஓடவில்லை. பழைய பேருந்துகளின் ஆயுட்காலத்தை நீட்டித்து அரசாணை வெளியிட்டதைத் தவிர, இந்த திமுக அரசு வேறு என்ன சாதித்தது என்று பொம்மை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா? அதிலும், அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு விலையில்லா நகர பேருந்து சேவை என்று அறிவித்துவிட்டு, வெறும் 30 சதவீத பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு விலையில்லா பேருந்து சேவையை அனுமதித்துள்ளார் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்.

தேர்தல் நேரத்தில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று சொல்லிவிட்டு, தற்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இந்த நாடகம் எதற்கு? 29 மாத கால விடியா ஆட்சியில் கல்வித் துறையை சீரழித்துவிட்டார்கள் என்று நாங்கள் மட்டும் கூறவில்லை; அனைத்து ஆசிரியர் சங்கங்களும்; ஆசிரியப் பெருமக்களும் இந்த திமுக ஆட்சியை திட்டுவது இன்னும் ஸ்டாலின் காதுகளுக்கு எட்டவில்லையோ?

2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம் என்று மார் தட்டியுள்ளார். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கியவர்கள் நாங்கள். ஆனால், இலவச மின்சாரத்தை பகல் மற்றும் நடு இரவு என்று இரண்டு ஷிப்டுகளாகப் பிரித்து வழங்கி விவசாயிகளை பாடாய்ப் படுத்துகிறது இந்த நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் அரசு. அரசு ஊழியர்களுக்கு நல்லது செய்தோம் என்று கூறியுள்ளார். எங்கள் ஆட்சியின் போது, மத்திய அரசு அறிவித்த மகப்பேறு விடுப்பு; அகவிலைப்படி உயர்வு; 7-வது ஊதிய உயர்வினை அமல்படுத்துதல் என்று அனைத்தையும் அமல்படுத்தி, அரசு ஊழியர்களின் நலனுக்குப் பாதுகாவலனாய் இருந்தது அம்மாவின் அரசு.

குடும்ப ஆட்சி திமுக என்று ஸ்டாலின் ஒத்துக்கொண்டதற்கு நன்றி. முதலில் கருணாநிதி, பிறகு ஸ்டாலின், தற்போது உதயநிதி என்று ஒரு குடும்பத்தின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. தலைவனைப் போலவே திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், அவர்களது குடும்ப வாரிசுகள் தவிர, மாவட்ட அளவில் கூட வேறு யாரும் திமுகவில் முன்னுக்கு வரமுடியாது. திமுகவில் மன்னர் ஆட்சி உள்ளது என்பதை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளார் ஸ்டாலின். உறவினர்களுக்கு டெண்டர் வழங்கியது குறித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகூடத் தெரியாத முதல்வர், அவர்தான் பொம்மை முதல்வர்.

சிறுபான்மையினர் நலன் பற்றி எம்ஜிஆர், ஜெயலலிதாஆகிய இருபெரும் தலைவர்களின் வழிகாட்டுதல்படிதான், அதிமுக நடந்து வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் பற்றி, நாங்கள் கூறிய வாக்குறுதியின்படிதான் இன்றும் நாங்கள் நடைபோடுகிறோம். அதில் திடமாய் இருக்கிறோம். அதைத்தான் இப்போதும் உறுதிபடுத்தி உள்ளோம். அதிமுக ஆரம்பித்தது முதல் இன்றுவரை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என்று தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாவலனாய் விளங்கி வருவது அதிமுகதான்.

ஆட்சிப் பொறுப்பேற்ற 29 மாத காலத்தில் விவசாயப் பெருமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், பெண்கள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் கெட்டப் பெயரை சம்பாதித்துள்ள நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் ஆவார்.

ஸ்டாலினுடைய குடும்ப ஊழல் பெருமையைப் பற்றி, அப்போதைய நிதியமைச்சர் பேசிய ஒலி நாடா சமூக ஊடகங்களில் வெளிவந்ததை வசதியாக மறந்துவிட்டார். மேலும், ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் சென்ற இலாக்கா இல்லாத அமைச்சரை, சென்னை உயர்நீதிமன்றமே தார்மீக ரீதியாக முதல்வர் கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்தும், ஊழல் அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்காதது கேலிக்கூத்தாக உள்ளது.

காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்து - ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனோ - கொண்ட காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்று, யார் யார் மூலம் கோடிகளில் பணம் கிடைக்குமோ, அவர்களின் பாதங்களைத் தாங்கும் பணியை கொள்கையாகக் கொண்ட கட்சியின் தலைவர், நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் தன்மானமும் கொண்ட எங்களைப் பார்த்து பாதந்தாங்கிகள் என்பது நகைச்சுவையானது. ஸ்டாலின் திருவண்ணாமலையில் அவரது கட்சியினரிடம் பேசும்போது, என்னை பச்சைப் பொய் பழனிசாமி என்று பேசியுள்ளார். பொய் பேசுவதில் கை தேர்ந்தவர் ஸ்டாலின். பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ கொடுப்பதாக அறிவித்தால், ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்.

நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, எங்களுடைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்டவற்றையும், அதிமுக அரசால் ஆரம்பிக்கப்பட்ட, நடைபெற்று வந்த மற்றும் முடிவுற்ற பணிகளையும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும், புதிதாக கட்டப்பட்ட பாலங்களையும், தமிழக நகரங்களில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகளையும் தான் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

ஸ்டாலினிடம், உங்களது 29 மாதகால திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், அதைப் பற்றி பேசாமல், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக மக்களிடையே பொய் பேசுகிறார். ஏனெனில், 29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை.

தான் வகிப்பது பெருமை மிக்க முதல்வர் பதவி என்பதை மறந்து, என் மீதும், அதிமுக மீதும் பாய்ந்து பிறாண்டியிருப்பது, ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது. இனியாவது ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்தவிட்டு, தமிழகத்தில் நிலைமை என்ன, தமிழக மக்கள் திமுகவைப் பற்றியும், அவரைப் பற்றியும் என்ன பேசுகிறார்கள் என்று தனது காவல் துறையை வைத்து விசாரித்துவிட்டு, இனியாவது உண்மையாகவே தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x