Published : 24 Oct 2023 10:53 AM
Last Updated : 24 Oct 2023 10:53 AM
சென்னை: வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து வணிக அமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் கோவிந்த ராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் மூலமாக தெரிய வருகின்றது.
வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், மூலப்பொருள் விலை உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, பணப் புழக்கம் குறைவு என பல்வேறு காரணங்களால் தொழிலும், வணிகமும் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த காலக் கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப் பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும்.
அரசுக்கான வரி வருவாய் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தமிழக முதல்வர் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT