Published : 23 Oct 2023 06:20 AM
Last Updated : 23 Oct 2023 06:20 AM

தமிழக பாஜகவினர் மீது தாக்குதல்; ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைப்பு: ஜெ.பி.நட்டா உத்தரவுக்கு அண்ணாமலை வரவேற்பு

புதுடெல்லி / சென்னை: தமிழக அரசால், பாஜகவினர் எதிர்கொண்டு வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று இரவு உத்தரவிட்டார்.

இந்தக் குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கையை பாஜக மேலிடத்திடம் விரைவில் வழங்கும். இந்த 4 பேர் கொண்ட குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாஜக தேசிய பொதுச் செயலர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஜெ.பி.நட்டாவின் இந்த அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது.

சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் இந்த குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x