Published : 06 Jan 2018 09:20 AM
Last Updated : 06 Jan 2018 09:20 AM
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தால் நேற்று காலை ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வேண்டிய திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தம்பதி, நேற்று காலை திருச்சியிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வந்து, அங்கிருந்து ஆத்தூருக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் தவித்துக் கொண் டிருந்தனர்.
ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரிடமும் சென்று ஆத்தூருக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சும் தொனியில் கேட்டனர். பலரும் சுமார் 60 கி.மீ. தொலைவு செல்வதற்கு தயங்கினர். அதே பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டும் பாண்டியன்(29), பரிதவித்த அந்த தம்பதியை அணுகி என்ன விஷயம், எங்கு செல்ல வேண்டும் எனக் கேட்டார்.
“ஒரு முக்கியமான வழக்கு விஷயமாக காலை 10.30 மணிக்குள் ஆத்தூர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். உங்களால் வர இயலுமா? நீங்கள் கேட்கும் தொகையை தருகிறேன்” என்று அந்த வழக்கறிஞர் தம்பதி கூறினர்.
பின்னர் நடந்தவற்றை பாண்டியன் விவரித்தார்.
“ஆட்டோவில் ஏறுங்கள்” எனக்கூறி அவர்களை உட்காரவைத்துக் கொண்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தேன். அப்போது மணி காலை 8.45 இருக்கும். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் 60 கி.மீ. தொலைவைக் கடந்து ஆத்தூர் நீதிமன்ற வாசலில் ஆட்டோவை நிறுத்தினேன். அந்த தம்பதி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
“இப்போதுதான் மனது நிம்மதி அடைந்தது. தம்பி நீங்க பத்திரமா பார்த்து ஊருக்குப் போய்ச் சேருங்கள்” எனக்கூறி கட்டணமாக ரூ.1,100-ஐ என்னிடம் கொடுத்துவிட்டு வழக்கறிஞர் கோட்டை அவசர அவசரமாக அணிந்துகோண்டு நீதிமன்றத்துக்குள் ஓட்டமும் நடையுமாகச் சென்றனர்.
‘அவர்கள் தவித்ததைப் பார்த்தபோது, பணம் எனக்கு ஒரு விஷயமா தெரியல. ஏதாவது முக்கியமான வழக்கு விஷயமாக ஆஜராகத்தான் அவர்கள் இவ்வளவு சிரமப்பட்டு திருச்சியிலிருந்து புறப்பட்டு ஆத்தூர் செல்ல வந்திருக்க வேண்டும். அதனால் அவங்க கொடுக்குறத கொடுக்கட்டும் என்று முடிவு செய்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் நீதிமன்றத்தில் கொண்டு சென்று விட வேண்டும் என தீர்மானித்து ஆட்டோவில் அழைத்துச் சென்றேன். குறித்த நேரத்துக்குள் அவர்களை நீதிமன்றத்தில் விட்டபின்னரே எனக்கும் மனம் நிறைவடைந்தது’ என்றார் பாண்டியன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT