Published : 22 Oct 2023 04:51 PM
Last Updated : 22 Oct 2023 04:51 PM
சென்னை: "திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை பனையூரில் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த வினோத்தின் குடும்பத்தினரை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் பாஜக கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
தமிழகத்தில் இன்றிலிருந்தே நிறைய இடங்களில் கொடிக் கம்பங்களை அமைக்க ஆரம்பித்துவிட்டனர். அது எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு இன்னும் வேகமும், உத்வேகமும் அளிக்கிறது. இந்தநிலையில், திமுக தங்களின் நம்பர் ஒன் எதிரியாக பாஜகவை பார்க்க ஆரம்பித்துள்ளது. பாஜகவும் எங்களுடைய நம்பர் ஒன் எதிரியாக திமுகவை பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.
எனவே, தேர்தல் களத்தில் சந்திப்போம். அதுவரை சண்டை சச்சரவுகள் நடக்கத்தான் போகிறது. இது ஜனநாயக அரசியலில் தவிர்க்க முடியாத விசயங்கள். பாஜக தொண்டர்கள் இன்று 13 பேர் சிறையில் உள்ளனர். அதில் 6 பேர் அந்த கொடிக்கம்ப வழக்கில் சிறையில் உள்ளனர்" என்று அவர் கூறினார்.
முன்னதாக அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, தமிழக பாஜக நிர்வாகிகள் சுரேந்திர குமார், பாலகுமார், கன்னியப்பன், வினோத் குமார், செந்தில் குமார் ஆகியோரையும், காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள், என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT