Published : 22 Oct 2023 03:29 PM
Last Updated : 22 Oct 2023 03:29 PM
புதுக்கோட்டை: "சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தேவை.பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பையே இந்த அரசு எடுக்கவில்லை. தமிழக முதல்வர் அந்த கணக்கெடுப்பை எடுக்கும்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்" என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான, ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம்கொத்தமங்கலம் ஊராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 1.25கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கான பணிகளை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தேவை. அரசு வேலைகள், பள்ளிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு வழங்கும்போது, புள்ளி விவரங்கள் இல்லாமல், கணக்கு இல்லாமல் எப்படி ஒதுக்கீடு வழங்குவது? புலிகளைக்கூட கணக்கிடுகிறோம். யானைகளைக் கணக்கிடுகிறோம் என்று நன்பர் ஒருவர் நாடாளுமன்றத்தில், வேடிக்கையாகக் கூறினார்.
கணக்கெடுப்பின் மூலம்தான், ஒடுக்கப்பட்ட மக்கள், வறுமை நிலையில் உள்ளவர்களின் நிலை தெரியவரும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கக்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பையே இந்த அரசு எடுக்கவில்லை. 2021-ல் அந்த கணக்கெடுப்பை எடுத்திருக்க வேண்டும். இப்போது 2023-ம் ஆண்டு முடியப்போகிறது. அந்த கணக்கெடுப்பையே மத்திய அரசு எடுக்கவில்லை. தமிழக முதல்வர் அந்த கணக்கெடுப்பை எடுக்கும்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்" என்றார்.
திமுகவின் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. சரி மற்ற மாநிலங்களுக்கு தேவை என்று நினைத்தார்கள் என்றால், வைத்துக்கொள்ளட்டும். தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பகாலத்தில் இருந்தே திமுகவின் கோரிக்கை. அதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட கோரிக்கை. நீட் தேர்வு தேவை இல்லை. நீட் தேர்வு இல்லாமல் தமிழகத்தில் இருந்து பல புகழ்பெற்ற மருத்துவர்கள் வந்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT