Published : 21 Oct 2023 09:56 PM
Last Updated : 21 Oct 2023 09:56 PM
புதுச்சேரி: “முதல்வர் உள்ளிட்டோரை விமர்சிப்பதை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவரான என்னை விமர்சித்து வருகிறார். அவர் சட்டப்பேரவைத் தலைவருக்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுகின்ற அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரிகளின் செயல்பாடுகள், அவர்கள் மீதான குறைபாடுகள் குறித்து பேரவைத் தலைவரிடம் புகார் கூற எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் தலைமைச் செயலர், நீர்வாக சீர்த்திருத்தத்துறைச் செயலர் ஆகியோரை அழைத்து எம்எல்ஏக்கள் கூறிய கருத்துக்களுக்கு பதில் பெற்று அதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கான பணிகளை செய்யவே அந்தக் கூட்டம் நடைபெற்றது. சரியாக செயல்படாத இரண்டு செயலர்களுக்கு விளக்கம் கேட்டு, 15 நாட்களுக்குள் பதில் அளிக்க கடிதம் அனுப்பியுள்ளேன்.
காங்கிரஸ் கட்சியில் நாராயணசாமியின் நிலை என்ன? கடந்த தேர்தலுக்குப் பிறகு எத்தனை முறை ராகுல் காந்தியை சந்தித்தார். காங்கிரஸில் என்ன பொறுப்பில் இருக்கின்றார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்காக, வைத்திலிங்கத்தை மறைமுகமாக தேர்தலில் நிற்க விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் தனி கோஷ்டியை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
தான் காங்கிரஸ் கட்சியில் இருப்பதை நிரூபிக்கவே வாரம்தோறும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றார். இதனை சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுச்சேரியில் அமைந்த பிறகு அறிவித்த அத்தனை திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. கேஸ் மானியம் 1 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000-ம் வழங்கும் திட்டம் விண்ணப்பித்த 6700 பேருக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது.
நிர்வாகத்தில் அதிகாரிகள் சிறு குழப்பங்களை செய்தாலும், மக்கள் நலத்திட்டங்கள் அத்தனையும் பிரதமரின் ஒத்துழைப்போடு இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. இதில் உள்ள குறையை நாராயணசாமி கண்டுபிடித்து சொல்லலாம். கடந்த 5 ஆண்டு காலத்தில் ரூ.5 கூட முதியோருக்கான உதவித்தொகை உயர்த்தித் தர முடியவில்லை.
இந்த ஆட்சியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர், விதவையர், முதிர்கன்னிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஒரு நபருக்கு கூட வழங்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களை ஒன்றைக்கூட அவர்களால் கொண்டு வரமுடியவில்லை. மத்திய அரசு அத்தனை திட்டங்களுக்கும் ஒப்புதல் கொடுத்து வருகிறது. கூட்டணியில் உள்ள பாஜக ஒத்துழைக்கவில்லை என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எந்த திட்டம் நடைபெறவில்லை என்று அவரால் கூற முடியாது. அப்படி கூறினாலும் நான் பதில் கூறுவேன்.
பேரவைத் தலைவருக்கான அத்தனை பணிகளையும் நான் சரியான முறையில் செய்து வருகின்றேன். எனவே அவரது கட்சித் தலைவரால் புறக்கணிக்கப்பட்ட நாராயணசாமி முதல்வர் உள்ளிட்டோரை தரைக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்” என்றார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நீங்கள் போட்டியிட போவதாக தகவல் வருவகிறதே என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பேரவைத் தலைவர் செல்வம், நல்ல சட்டப்பேரவைத் தலைவராக நீடித்துக்கொண்டு வருகின்றேன். கட்சியின் தலைமை என்ன ஒப்புதல் கொடுத்தாலும் அதனை செய்வேன். என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT