Published : 21 Oct 2023 05:02 AM
Last Updated : 21 Oct 2023 05:02 AM

‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ முறையில் பேரிடர் கால ஒத்திகை: அபாய ஒலியுடன் 8 லட்சம் செல்போன் திரைகளில் தோன்றிய அறிவிப்புகள்

செல்போனில் வெளிவந்த அறிவிப்பு

சென்னை: நாட்டில் கனமழை, வெள்ளம், சுனாமி, நில நடுக்கம், புயல் போன்ற பேரிடர்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. 2004-ம் ஆண்டு வங்கக் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள்பறிபோயின. இதுபோன்ற பேரிடர் உயிரிழப்புகளைத் தடுக்க 2005-ம் ஆண்டு மத்திய அரசால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் பல்வேறு படிப்பினைகள் அடிப்படையில் சிறந்த நடைமுறைகளை உருவாக்கி, பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதையும் தடுக்கும் நோக்கில்தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்மற்றும் இந்திய தொலைத் தொடர்புத்துறை ஆகியவை இணைந்து நவீன தொழில்நுட்பத்தில் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ என்ற மென் பொருளை உருவாக்கியுள்ளன. இந்த தொழில்நுட்பம் ஒவ்வொரு மாநிலமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று தமிழகத்தில் பரிசோதிக் கப்பட்டது.

அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் காலை சுமார் 11.30 மணி அளவில் பொதுமக்களின் செல்போன்களுக்கு, இதுவரை கேட்டிராத புதிய அபாய ஒலி எழுப்பியவாறு, பேரிடர் எச்சரிக்கை ஒத்திகை குறித்த வாசகங்கள் இடம்பெற்ற தகவல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் செல்போன் திரையில் தோன்றின. நேற்றே இந்த ஒத்திகை தொடர்பாக செல்போன் மற்றும் செய்தித்தாள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், எச்சரிக்கை ஒலி வந்ததும் பொதுமக்கள் சில நொடிகள் திகைத்தாலும், பின்னர் அது பேரிடர் எச்சரிக்கை ஒத்திகைக்கான ஒலி என்பதை அறிந்துகொண்டனர்.

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை தொழில்நுட்பம் முதன் முதலில் 1997-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சில செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் சோதனை அடிப்படையில் முயற்சி செய்தன. அதில் நல்ல பலன்கள் கிடைத்த நிலையில், அந்ததொழில்நுட்பத்தில் ஒவ்வொரு நாடும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து, 2008-ம்ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக பேரிடரால் அதிகம் பாதிக்கப்படும் ஜப்பான், அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவுக்கென தனி மென்பொருள்: தமிழகத்தில் நேற்று செயல்படுத்தப்பட்ட ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ மென்பொருள் செயல்படும் முறை குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது பேரிடர் தொடர்பான தகவல்களை தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செய்தி போன்றவை மூலம் தெரிவித்து வருகிறோம். பேரிடர் காலங்களில் மின்சாரம் தடைபடும்போது, தொலைக்காட்சி, வானொலிகளில் தெரிவிக்கப்படும் அவசரகால தகவல்கள் மக்களை சென்று சேராது. குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றால் முன்கூட்டியே நமக்கு பொதுமக்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்துக்கெனதனியாக எச்சரிக்கைகளை விடுப்பது சாத்தியமில்லை. மேலும் தொலைக்காட்சி, வானொலி தகவல்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தவர்கள், பயணம் மேற்கொண்டு இருப்போரால் தெரிந்துகொள்ள முடியாது.அதனால் உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் பேரிடர் கால நவீன எச்சரிக்கை முறைகள் அடிப்படையில் இந்தியாவுக்கென தனியாக ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நாம் செல்போனில் அழைப்பதற்கும், குறுஞ்செய்தி அனுப்பவும் தனித்தனி சேனல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பேரிடர் கால தகவல்களை அனுப்ப பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கிய மென்பொருளுக்கும் தனி சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 லட்சம் பேருக்கு 5 விநாடிகளில் அபாய ஒலியுடன்பேரிடர் கால எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பிவிட முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் எச்சரிக்கை அறிவிப்புகளை கொடுக்க வேண்டும் என்றால், அங்குள்ள டவர்களில் யாருடைய செல்போன் சிக்னல்கள் கிடைக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் எச்சரிக்கை அறிவிப்புகள் சென்று சேர்ந்துவிடும்.

இணைய குற்றவாளிகள் சேதப்படுத்த முடியாது: போனில் அழைத்தாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ ஓவர் லோடு ஏற்படும். ஆனால் இந்த சேவைக்கென தனி சேனல் இருப்பதால், ஓவர் லோடு என்ற பேச்சுக்கே இடமில்லை. வாட்ஸ்அப்பில் வருவது போன்று அவரவர் அறிந்த கருத்துகளை இதில் பரப்ப முடியாது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மட்டுமே இதில் வரும். அதனால் இந்த அறிவிப்புகள் நம்பகமானது. இந்த மென்பொருளை, இணைய குற்றவாளிகள் சேதப்படுத்த முடியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில்தமிழகத்தில் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களுக்கு பேரிடர் கால ஒத்திகை எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் என்னென்ன இடையூறுகளை சந்தித்து இருக்கிறோம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அந்த விவரங்கள் பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x