Published : 21 Oct 2023 09:18 AM
Last Updated : 21 Oct 2023 09:18 AM
சென்னை: பணியின்போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் நினைவாக இன்று காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உயிர் தியாகம் செய்த போலீஸாரின் உருவங்கள் டிஜிபி அலுவலகத்தில் பளிங்கு கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட போலீஸாரின் நினைவு தினத்தில் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1959 அக்.21-ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து, திடீர் தாக்குதல் நடத்தியதில், மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். எல்லையை காக்கும் போரில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தைநினைவுகூர்ந்து, ஆண்டுதோறும் அக்.21-ம்தேதி வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, நாடு முழுவதும் காவல், உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பணியில் உயிர்நீத்த காவல் துறையினர், பாதுகாப்பு படையினர்,துணை ராணுவ படையினர் உள்ளிட்ட வீரர்களின் தியாகத்தையும் நினைவுகூர்ந்து இந்தநாளில் வீர வணக்கம் செலுத்தப்படுகிறது.
அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் வீர வணக்க நாள் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. அங்கு உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
பணியின்போது உயிர் தியாகம் செய்த 150-க்கும் மேற்பட்ட போலீஸாரின் உருவங்கள் டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவு சின்னத்தை சுற்றி பளிங்கு கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. உயிர் தியாகம் செய்தோரின் நினைவு நாளில் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தவும் போலீஸ் அதிகாரிகள் அனுமதிவழங்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘பணியின்போது உயிர் தியாகம் செய்தோர் வணக்கத்துக்கு உரியவர்கள். அவர்கள் அனைவருக்கும் பொதுவாக அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்.21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட காவலர்களின் நினைவு தினத்தில் அவர்களது குடும்பத்தினர் டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT