Published : 21 Oct 2023 05:06 AM
Last Updated : 21 Oct 2023 05:06 AM
மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல், தமிழக அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கோயில் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் (82). வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் மறைந்தார். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் உள்ள சித்தர்பீட பக்தர்கள் அவரது மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தனர்.
இதற்கிடையே, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அருகே உள்ள அவரது இல்லத்தில் பக்தர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்கு பங்காரு அடிகளார் உடல் வைக்கப்பட்டது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர். கைக்குழந்தையுடனும் பல பெண்கள் வந்து, அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர். பெண்கள் பலரும் அழுது புரண்டு கண்ணீர் விட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 9 மணி அளவில் பங்காரு அடிகளாரின் இல்லத்துக்கு வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், பங்காரு அடிகளார் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் பின்புறம் உள்ள கலை அரங்கத்தில் வைக்கப்பட்டது. அங்கு, பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, செஞ்சி மஸ்தான், புதுச்சேரி அமைச்சர் நமச் சிவாயம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர் சந்தானம், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா கோயிலின் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர்கள், பல்வேறு பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், கோயில் வளாகத்துக்கு பங்காரு அடிகளார் உடல் கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் அறிவித்தபடி, அங்கு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், சித்தர் கோயில் மற்றும் புற்றுக்கோயிலின் இடையே ஆதிபராசக்தி கருவறையின் வலது புறத்தில், உட்கார்ந்த நிலையில் வைத்து மஞ்சள், குங்குமம், விபூதி, ஜவ்வாது, வேப்பிலை, துளசி போன்ற பொருட்களால் பூஜை செய்யப்பட்டு, சித்தர் முறைப்படி பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. ஆன்மிகமும், கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும். இந்த மனித குலத்துக்கான தனது அயராத சேவை, கல்விக்கு முக்கியத்துவம் தந்த அவர், பலரது வாழ்வில் நம்பிக்கை, அறிவு விதைகளை விதைத்துள்ளார்’ என்று நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தருமபுரம் ஆதீனம், ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அஞ்சலி செலுத்த வந்த மக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உட்பட அனைவருக்கும் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு பகுதிகளிலும் உணவு, குடிநீர், தேநீர் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT