Published : 20 Oct 2023 09:20 PM
Last Updated : 20 Oct 2023 09:20 PM

மீண்டும் பழைய பாரம்பரிய கல் கட்டிடத்துக்கு மாறும் மதுரை ஆட்சியர் அலுவலகம்: புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்

மதுரை. தமிழகத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்ய வந்த பிரிட்டிஷார் மீனாட்சிம்மன் கோயிலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மதுரை நகரின் அழகை கண்டு வியந்தனர். அதனாலேயே, மதுரையை மையமாக கொண்டு தென் பகுதிகளை பிரிட்டிஷார் 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சி செய்யத் தொடங்கினர்.

அதற்காக தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 1916ஆம் ஆண்டு பிரம்மாண்ட கல்கட்டிடத்தை கட்டினர். விசாலமான அறைகள், மாடங்கள், நடைபாதைகளுடன் அரண்மனைபோல் இந்த கட்டிடத்தைக் கட்டினர். தற்போது இந்தக் கட்டிடம் 100 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம் குறையாமல் உள்ளது. தமிழகத்தில் உள்ள 29 பழைய பாரம்பரியக் கட்டிடங்களில் ஒன்றாக பிரிட்டிஷார் கட்டிய மதுரை ஆட்சியர் அலுவலகம் உள்ளது. அதனால், இந்தக் கட்டிடத்தை புனரமைக்கவோ, புதுப்பிக்கவோ தொல்லியல்துறை அனுமதி பெற வேண்டும்.

இந்தக் கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமில்லாது தாசில்தார் அலுவலகங்கள், பிற அரசுத் துறைகள் செயல்பட்டு வந்தன. காலப்போக்கில் இந்த பழைய கட்டிடத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டன.

அதனால், கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.30 கோடி செலவில் தற்போது ஆட்சியர் அலுவலகம் செயல்படும் புதிய கட்டிடம், வெள்ளை மாளிகை போல் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் துறை அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் மாற்றப்பட்டன.

தாசில்தார் அலுவலகங்கள், வழக்கம்போல் பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டன. ஆட்சியர் அலுவலகம் செயல்பட்ட பழைய பிரிட்டிஷார் கட்டிடம், பராமரிப்பு இல்லாமல் பாழடையத் தொடங்கின. இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைத்து, மற்ற அரசு துறை அலுவலகங்கள் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கிடையில், பழைய பிரிட்டிஷார் கட்டிடத்தில் செயல்பட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கம்பீரமும், பாரம்பரியமும், புதிய கட்டிடத்தில் இல்லை. அதனால், ஆட்சியருடைய நிர்வாக அலுவலகம் மட்டுமாவது பழைய பிரிட்டிஷார் கட்டிடத்தில் செயல்பட்டிருக்கலாமோ? என ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள், அரசுத் துறை அதிகாரிகள் மத்தியில் விவாதங்களும், எதிர்பார்ப்புகளும் எழுந்தது.

இந்நிலையில் புதிய ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட்சியராக வந்த அனீஸ் சேகர் பழைய பிரிட்டிஷார் கட்டிய கட்டிடத்துக்கே மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை கொண்டு வர விரும்பினார். அதனால், அவரது நிர்வாகம் இருந்தபோதே பழைய பிரிட்டிஷார் கட்டிய பழைய ஆட்சியர் அலுவலகத்தை பழமை மாறாமல் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இப்பணி தீவிரமாக நடக்கும்நிலையில் இப்பணி நிறைவு பெற்றப்பிறகு ஆட்சியர் சங்கீதா, பழைய பிரிட்டிஷார் கட்டிடத்துக்கு மீண்டும் தனது ஆட்சியர் அலுவலகத்தை மாற்ற உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கூடுதல் கட்டிட அலுவலகமாகவே கட்டப்பட்டது. பழைய பிரட்டிஷார் கட்டிடம் சீரமைப்பதற்காகவே புதிய கட்டிடத்துக்கு தற்காலிகமாகவே ஆட்சியர் அலுவலகம் மாற்றப்பட்டது. தற்போது பழைய கட்டிடம் சீரமைத்தப்பிறகு மீண்டும் ஆட்சியர் அலுவலகமாக அக்கட்டிடம் மாறும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x