Published : 20 Oct 2023 03:31 PM
Last Updated : 20 Oct 2023 03:31 PM
சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள ஊராட்சி அரசனூர். இந்த ஊராட்சியின் தலைவர் செல்வராணி, மக்கள், அதிகாரிகள் ஒத்துழைப்போடு ஊராட்சியை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றி சாதித்துள்ளார். இதற்காக மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சிவகங்கை ஒன்றியம், அரசனூர் ஊராட்சியில் அரசனூர், திருமாஞ்சோலை உள்ளிட்ட 9 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 5,309 பேர் வசிக்கின்றனர். இதன் ஊராட்சித் தலைவராக செல்வராணி (33) உள்ளார். எம்.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர் 4 ஆண்டுகளில் ஊராட்சியை சாலை, தெரு விளக்கு, குடிநீர், நீர்நிலை மேம்பாடு, மரம் வளர்த்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்திலும் தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றி உள்ளார்.
ஆதிதிராவிடர்கள் வசிக்கும் செம்பூர் காலனியில் பல ஆண்டுகளாக நிலவிவந்த குடிநீர், தெருவிளக்கு பிரச்சினைகளை தீர்த்ததோடு, தெருக்கள் முழுவதும் பேவர்பிளாக் சாலைகளாக மாற்றினார். சமத்துவபுரத்தில் 100 வீடுகளையும் சீரமைத்து, குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்த பஞ்சாயத்தில் உள்ள 5 ஊருணிகள், 5 பொதுப்பணித்துறை கண்மாய்கள் உட்பட 24 கண்மாய்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு, வரத்துக் கால்வாய்களை சீரமைத்தார். குடிநீர் ஊருணிகள் முழுவதும் கம்பிவேலி அமைத்துள்ளார்.
மேலும் கண்மாய்கள் சீரமைக்கப்பட்டதால் தண்ணீர் கொள்ளளவு அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் இந்த ஊராட்சியில் விவசாய பரப்பும் அதிகரித்து, அதிகளவில் கரும்பு விவசாயம் செய்கின்றனர். கண்மாய் கரைகள், சாலை, தெருவோரங்களில் பல ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அரசனூரைச் சேர்ந்த குழந்தைகள் திருமாஞ்சோலை பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் சென்று வந்த மண் பாதை மோசமாக இருந்தது. இதனால் மழைக்காலங்களில் 3 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து அதை மெட்டல் சாலையாக மாற்றினார்.
ஊராட்சித் தலைவரின் முயற்சியால் தன்னிறைவு பெற்றதாக மாறிய அரசனூரை தமிழகத்திலேயே முதல் ஊராட்சியாகவும், இந்திய அளவில் 4-வது ஊராட்சியாகவும் தேர்வு செய்து சமூக பாதுகாப்புடைய ஊராட்சி பட்டம் கொடுத்து மத்திய அரசு கவுரவித்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் செல்வராணி கூறியதாவது: நான் முதன்முறையாக ஊராட்சித் தலைவராக தேர்வானேன். எங்களது ஊராட்சியை தன்னிறைவு பெற்றதாக மாற்ற முடிவு செய்தேன். அதற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். எங்கள் பகுதியில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. ஆனால், கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க பல கி.மீ. செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து எங்கள் ஊராட்சியிலேயே பகுதிநேர கால்நடை மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்தோம். இதன்மூலம் சுற்றியுள்ள மற்ற கிராம மக்களும் பயன்பெறுகின்றனர்.
அதேபோல், எங்கள் பகுதி வியாபாரிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை மதுரையில் விற்பனை செய்து வந்தனர். அவர்களுக்காக திருமாஞ்சோலையில் வாரச்சந்தையை ஏற்படுத்தி கொடுத்தோம். இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த ஊராட்சியில் 28 மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி, அவர்கள் கடன் பெற்று தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். மேலும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் களிமண் பொம்மை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT