Published : 20 Oct 2023 10:55 AM
Last Updated : 20 Oct 2023 10:55 AM
சென்னை: காவலர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். காவல் துறையினருக்கு போதிய ஊதியம் வழங்காதது துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதற்கு இணையாக தங்களின் ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக காவல் துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் எந்தக் கோரிக்கையையும் தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாட்டைக் காக்கும் காவலர்களின் கோரிக்கையை ஏற்க அரசு மறுப்பது பெரும் நம்பிக்கை துரோகமாகும்.
ஒப்பீட்டளவில் காவலர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்; காவலர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு என்பதால், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை காவலர்களுக்கும் வழங்க வேண்டும்
என்று பல ஆண்டுகளாக காவலர்கள் கோருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாய்மொழியாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தக் கோரிக்கை ஆய்வுக்குக் கூட எடுக்கப்படவில்லை.காவலர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய பயணப்படி, மிகை நேரப்படி ஆகியவை கடந்த 3 மாதங்களாக பல மாவட்டங்களில் வழங்கப்படவில்லை.
25 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர்களுக்கு அடையாள அட்டை, செல்பேசிக்கான சிம் ஆகியவை இன்னும் வழங்கப்படவில்லை. காவலர்களுக்கு வார விடுப்பு வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தாலும் கூட பல மாவட்டங்களில் அது நடைமுறையில் இல்லை. காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், அவர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கும் நிலையில், அவர்களுக்கு விடுமுறையும் வழங்கப்படாததால், அவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
காவலர்களை உற்சாகமாக பணி செய்ய ஊக்குவிப்பது அவர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு தான். திமுக ஆட்சிக்கு வந்தால், காவலர்களுக்கு 7 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலர், 10 ஆண்டுகளில் தலைமைக் காவலர், 20 ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப் படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே இருந்த முறையில் கூட பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பது தான் மிக வேதனையான உண்மை.
கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருப்பத்தூர் உள்ளிட்ட புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உயர் அதிகாரிகள் பணியிடங்கள் மட்டும் தான் அதிகரிக்கப்பட்டு, அவை நிரப்பப்பட்டனவே தவிர, காவலர்கள் நிலையிலான பணியிடங்கள் நான்கு ஆண்டுகளாகியும் அதிகரிக்கப்படவில்லை. அதனால், காவலர்கள்
பணிச்சுமைக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட இன்னொரு மிக முக்கியமான வாக்குறுதி, காவலர்களின் குறைகளை கேட்டு அறிவதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப் படும் என்பதாகும். அத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, வழக்கமாக நடத்தப்பட்டு வந்த குறைதீர்ப்பு முகாம்கள் கூட முறையாக நடத்தப்படுவதில்லை. குறைகளை தீர்க்கும் பொறுப்பில் உள்ள உயரதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதால்,
அடிக்கடி குறைகள் தான் கேட்கப்படுகிறதே தவிர, அவை தீர்க்கப்படுவதில்லை. காவலர்களின் கவலைகள் தொடர்கின்றன.
தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்; ஆட்சியாளர்கள் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் காவல்துறையினர் தான். அவர்கள் கடமையை சரியாக செய்யவில்லை என்றால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது; தமிழ்நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு முக்கியமான பணியை செய்து வரும் காவலர்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு, போற்றப்பட வேண்டும். ஆனால், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதில்லை.
தமிழக அரசுப் பணியாளர்களில் சபிக்கப்பட்டவர்கள் என்றால் காவலர்கள் தான். நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் எதுவுமின்றி அழைக்கப்படும் போதெல்லாம் ஓடி வந்து பணி செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆட்சியாளர்களின் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டால் பல நேரங்களில் இரு நாட்களுக்கு, இயற்கை அழைப்புகளுக்குக் கூட இடம் கொடுக்காமல் சாலையோரங்களில் விழிப்புடன் காவல் காக்க வேண்டும்.
குடும்பத்தினரை பல நேரங்களில் பார்க்க முடியாமல், குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பணிக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் சோகமும், துரோகமும் ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விடுப்பு உள்ளிட்ட காவலர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT