Published : 20 Oct 2023 05:54 AM
Last Updated : 20 Oct 2023 05:54 AM
ராமேசுவரம்: இலங்கையில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுவிக்கப்பட்டார்.
இலங்கை யாழ்ப்பாணம் சுழிப்புரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2018 ஜூன் 25-ம் தேதி பள்ளி சென்றுவிட்டு திரும்பும்போது மாயமானார். பின்னர் அங்குள்ள தோட்டக் கிணற்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் சிறுமி கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
சிறுமியின் படுகொலையைக் கண்டித்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “நாங்கள் 2009-ம் ஆண்டு போருக்கு முன் விடுதலை புலிகள் காலத்தில்எப்படி பாதுகாப்பாக வாழ்ந்தோம்என்பதை இப்போதுதான் உணர்கிறோம். நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும், எங்களது பிள்ளைகள் பள்ளி சென்றுவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்என்றால், மீண்டும் விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை ஏற்று, விஜயகலா மகேஸ்வரன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கொழும்பு குற்றப் புலனாய்வு மற்றும் தடுப்புப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விஜயகலா மகேஸ்வரனை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக..: இந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நிலையில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றப்பத்திரிகை பதிவுசெய்ய எவ்விதமான உத்தேசமும் இல்லை என்று எழுத்துப் பூர்வமாக இலங்கை சட்டத் துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரனை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT