Published : 20 Oct 2023 08:39 AM
Last Updated : 20 Oct 2023 08:39 AM
திருப்பூர்: மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்களுக்கும் மேல் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தால், புதிதாக குடும்ப அட்டைகள் கேட்டு பலரும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளதாகவும், உரிய தகுதி வாய்ந்த விண்ணப் பதாரர்களுக்கு, 4 மாதங்களாகியும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் கூறியதாவது: கடந்த ஜூலை மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது தொடங்கி தற்போது வரை புதிய குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய குடும்ப அட்டைக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக குடும்ப அட்டை அச்சிடப்படவில்லை.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும்திட்டத்துக்கு இனி வரும் நாட்களில் பலரும் விண்ணப்பிக்க இருப்பதால், ஒரே கதவு எண்ணில் பலர் புதிதாக விண்ணப்பிப்பதையும் பார்க்க முடிகிறது. உரிய விசாரணைகள் முடிந்த பின்னர்தான், உரியவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க இயலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1,500 முதல் 2,000 குடும்ப அட்டைகள் கேட்டு புதிதாக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் இதைவிட பலமடங்கு அதிகம். சில நாட்களாக பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை தொடர்ந்து வருகிறோம். இன்னும் புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இது நிலுவையில் இருப்பதால், விரைவில் அரசு இது தொடர்பாக தெளிவான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT