Published : 20 Oct 2023 07:20 AM
Last Updated : 20 Oct 2023 07:20 AM
சென்னை: மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்று சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் காலமே சமூக நீதியின் பொற்காலமாக இருக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஐஏஎஸ் பணிகளில் நியமிக்கப்பட்டோர் விவரங்களை மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அதில் "கடந்த 5 ஆண்டுகளில் ஐஏஎஸ் பணிக்கு மொத்தம் 2 ஆயிரத்து 163 பேரும், ஐபிஎஸ் பணிக்கு 1,403 பேரும், இந்திய வனப் பணிக்கு 799 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 334 (7.65) எஸ்சி பிரிவினரும், 166 (3.80) எஸ்டி பிரிவினரும், 695 (15.92) ஓபிசி சமுதாயத்தினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்று பதில் அளித்தார்.
இந்த குறைவான பிரதிநிதித்துவம் சாதி அடிப்படையிலான மோசமான பாகுபாட்டை காட்டுகிறது. இதற்கு ஒரே வழி, ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பாஜக அரசு இருப்பதால்தான், சாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று ராகுல்காந்தி வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறும் காலமே சமூகநீதியின் பொற்காலமாக இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராமதாஸ் வலியுறுத்தல்
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆந்திர அரசு நடத்தும் என்று ஆந்திர சட்டப்பேரவையில் கடந்த ஏப்.4-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி அரசு தீர்மானம் நிறைவேற்றியது. 6 மாதங்கள் ஆகியும் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வராததால் மாநில அளவில் வரும் நவ.15-ம் தேதி கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றத் தயங்குகிறது.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், சமூக, பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கிவிடும். எனவே, கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT