Published : 19 Oct 2023 09:19 PM
Last Updated : 19 Oct 2023 09:19 PM

ஆன்மிகப் புரட்சி முதல் சமூகத் தொண்டு வரை - மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். நீண்டகாலமாக உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

ஆளுநர் ரவி: 'அம்மா' பங்காரு அடிகளாரின் மறைவால் வருத்தமடைந்தேன். பண்பட்ட ஆன்மா & சிறந்த ஆன்மிக குரு அவர். கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தங்களுக்கான அவரது பங்களிப்புகள் என்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!.

முதல்வர் ஸ்டாலின்: கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. அவரது ஆன்மிக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது.

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர். மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வி சேவை ஆற்றியதோடு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சேவை ஆற்றியவர். மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி: 1985ம் ஆண்டு மரத்தடி ஒன்றின் கீழ், ஓலை குடிசையில் அமர்ந்து, குறி சொல்ல ஆரம்பித்து, படிப்படியாக மக்களிடையே கடவுள் நம்பிக்கை வளர்த்து, ஆன்மீக புரட்சி செய்து, சாதாரண ஏழை, எளிய, பாமர மக்கள் மத்தியில் பெண் தெய்வ வழிபாட்டை வளர்த்தெடுத்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தனது 82வது வயதில் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

ஒரே தாய், ஒரே குலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், கடவுள் வழிபாட்டில் ஜாதி சமய வேறுபாடுகளை தகர்த்து, கருவறைக்குள் பெண்களை அனுமதித்து, தரிசிக்க, அபிஷேகம் செய்ய வாய்ப்புகளை வழங்கி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர். பக்தர்கள் அனைவரும் செவ்வாடை அணிந்து மேல்மருவத்தூரில் சில முக்கியமான நிகழ்வுகளின்போது தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்து மொழி வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கில் வாகனங்களிலும், பேருந்துகளிலும் மேல்மருவத்தூரில் குவிந்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களின் வருகையால் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் வழிபாட்டு முறையை நெறிப்படுத்தினார். திருமுருக கிருபானந்த வாரியார் மறைவிற்கு பிறகு தமிழ் வழிபாட்டு முறையில் மாபெரும் புரட்சி செய்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்.

ஊராட்சி பள்ளியில் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து, சைக்கிள் பயணம் செய்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்ட பங்காரு அடிகளார் நாடுபோற்றும் ஆன்மீக குருவாக உருவெடுத்தார். கடவுள் வழிபாட்டின் மூலம் பக்தியை வளர்த்த அதே நேரத்தில், கோயில் நிர்வாகத்தில் கிடைத்த வருமானத்தின் மூலம் கல்வித்துறையில் நுழைந்து மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, பள்ளிக் கல்வி என நிறுவனங்களை தொடங்கி அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறுகிற வகையில் பொது நல சேவை செய்தவர் பங்காரு அடிகளார். அவரது மறைவு ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை வழிபடும் எண்ணற்ற பக்தர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: பங்காரு அடிகளார் என் மீது தனிப்பாசம் கொண்டவர். எனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். கடந்த சில வாரங்களுக்கு முன் பங்காரு அடிகளாரை எனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். என்னையும், குடும்பத்தினரையும் வாழ்த்தி அனுப்பிய அவர், இவ்வளவு விரைவாக நம்மை விட்டு பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை; அவரது மறைவு செய்தியை நம்ப முடியவில்லை. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு ஆகும்.

பங்காரு அடிகளாருக்கு ஆயிரம் சிறப்புகள் உண்டு. அவற்றில் முதன்மையானதாக நான் கருதுவது அவர் மேற்கொண்ட ஆன்மிகப் புரட்சி தான். கருவறைக்குள் சாதாரணமானவர்கள் நுழையக்கூடாது; சில நாட்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையவே கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு இருந்த காலத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்பே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை நிறுவி, அதில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம்; அவர்கள் கருவறைக்கே சென்று வழிபாடு செய்யலாம் என்ற நடைமுறையை ஏற்படுத்தியவர்.

தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் ஆதிபராசக்தி மன்றங்களை நிறுவி, அவற்றின் தலைவர்களாக பெண்களை அமர்த்தி, அவர்களை தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்து அழகு பார்த்தவர் பங்காரு அடிகளார். ஆன்மிகவாதி என்பதைக் கடந்து பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, கிராமப் புற மக்களுக்கும் கல்வி வழங்கியவர் அவர். ஏழைகளுக்கு உதவி, இயற்கைப் பாதுகாப்பு என பல்வேறு வழிகளில் சமுதாயத் தொண்டுகளையும் செய்து வந்தவர் பங்காரு அடிகளார்.

பங்காரு என்றால் தங்கம் என்று பொருள். தமது பெயரின் பொருளுக்கு ஏற்ப தமது வாழ்நாளில் தங்கமான மனிதராகவே வாழ்ந்து மறைந்தவர் அவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், உலகெங்கும் உள்ள பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். உலக அளவில் சக்தி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ஆன்மீக பணிகளோடு, பல சமூக நலப் பணிகளையும் சிறப்பாக ஆற்றிய பெருமைக்குரியவர் பங்காரு அடிகளார். இவரது ஆன்மீகச் சேவையை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம ஸ்ரீ’ விருதினை இவருக்கு வழங்கியது. இந்திய நாடு ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியை இழந்துவிட்டது. இவருடைய இழப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஆகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பங்காரு அடிகளார் எனது சமகாலத்தவர் என்பதையும் கடந்து எனது குடும்ப நண்பர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையுண்டு என்பதற்கிணங்க ஆன்மிக வழியில் மக்களை முன்னேற்றவும், அவர்களுக்கு அமைதி வழங்கவும் உழைத்தவர். இறைவனுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு; அவர்களால் இறைவனை நெருங்க முடியாது; குறிப்பாக பெண்கள் கருவறையை நெருங்கக் கூட முடியாது என்று திட்டமிட்டு வழக்கங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தையும் பங்காரு அடிகளார் தகர்த்தார். பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர். அந்த வகையில் ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் பங்காரு அடிகளாருக்கு உண்டு.

பெண் குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்துவது தான் தாம் அவதரித்ததன் நோக்கம் என்று பங்காரு அடிகளார் அடிக்கடி கூறுவார். அதற்கேற்ப மகளிர் முன்னேற்றம் என்ற உன்னத நோக்கத்திற்காக பங்காரு அடிகளாரும், ஆதிபராசக்தி சித்தர் பீடமும் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கவை. இயற்கையை போற்றியும், அனுசரித்தும் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்ற பங்காரு அடிகளாரின் அறிவுரை ஆன்மிக எல்லையை தாண்டி அனைவருக்கும் பொதுவானது. அவரது அறிவுரை எவ்வளவு உண்மையானது என்பதை காலநிலை மாற்றம் என்ற பெயரில் இன்று நடக்கும் நிகழ்வுகள் மூலம் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டிருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள ஆலயத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் அமைதிப் புரட்சியை ஆன்மீகத் துறையில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் பங்காரு அடிகளார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உதவியது. ஆதிபராசக்தி சித்தர் பீடம் அந்தப் பகுதியில் அமைந்ததால் கல்வி, சமுதாயம், விவசாயம், வணிகம் என பல துறைகளிலும் முன்னேற்றம் நிலவியது. பங்காரு அடிகளாரின் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2019ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியது. பங்காரு அடிகளாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், செவ்வாடை தொண்டர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளாரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். ஆன்மீக சேவை மட்டுமின்றி கல்வி சேவை மற்றும் மருத்துவ சேவைகளையும் வழங்கி வந்தவர். தமது சேவைக்காக ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். ஆன்மீகத்தில் பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆன்மீகத் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x