Published : 19 Oct 2023 09:28 PM
Last Updated : 19 Oct 2023 09:28 PM
நாமக்கல்: வாகன வரி உயர்வை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நவம்பர் 9-ஆம் தேதி தமிழகத்தில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் தெரிவித்தார்.
நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் தலைமை வகித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “ஆன்லைன் அபராதம் மற்றும் வாகன வரி உயர்வும் லாரி உரிமையாளர்களை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளது. இந்த வரி உயர்வை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர்9-ம் தேதி தமிழகத்தில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளோம். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் தமிழகத்துக்கு வரும் லாரிகளும் அந்தந்த பார்டரில் நிறுத்தப்படும். தமிழகத்தில் இருந்தும் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படாது. தமிழகத்தில் 6.50 லட்சம் லாரிகள் உள்ளன. இதில் எங்களுக்கு மட்டும் வரி உயர்வு இல்லை. அனைத்து வாகனங்களும் இந்த வரி உயர்வு பொருந்தும். ஏறத்தாழ 20 லட்சம் வாகனங்கள் உள்ளன.எனவே வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு கேட்க உள்ளோம்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக நவம்பர் 25-ம் தேதி காலவரையற்ற லாரி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க உள்ளனர். எனவே தமிழக அரசு எங்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் முழுமையாக கடைபிடிக்கப்படும்.
கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தை காட்டிலும் வாகன வரி குறைவு தான். பண்டிகை காலம் என்பதால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் ரூ.30 கோடி அளவில் வாகன வாடகை பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி சரக்கு தேக்கம் உள்ளிட்டவை ஏற்படும்” என்றார். சங்க செயலாளர் பி.ராமசாமி, பொருளாளர் ஆர்.தாமோதரன், இணைச் செயலாளர் வி.பி.செல்வராஜா உள்ளிட்டோர் உடனடிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT