Published : 19 Oct 2023 07:56 PM
Last Updated : 19 Oct 2023 07:56 PM
காரைக்கால்: காரைக்கால் அருகே சுய உதவிக் குழு மகளிர் தயாரித்த பொருட்கள் இடம்பெற்ற கண்காட்சியை, ராஜினாமா அறிவிப்புக்குப் பின்னர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில ஊரக வளர்ச்சித் துறையின், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், குரும்பகரம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், சுய உதவிக் குழு பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்ட கண்காட்சி இன்று (அக்.19) நடைபெற்றது. இதில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி வைத்து கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசினார். நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில், 32 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் பங்கேற்று, தாங்கள் உற்பத்தி செய்திருந்த சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், விவசாய உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை காட்சிப் படுத்தியிருந்தனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கு.அருணகிரிநாதன், இணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.ரெங்கநாதன், விரிவாக்க அலுவலர் டி.மாரியப்பன், அலுவலர்கள், சுய உதவிக் குழு பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த, அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 10-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, "தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்குள்ளாகி வந்த நிலையில், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து” ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன், "அமைச்சர் சந்திர பிரியங்காவின் துறை ரீதியான செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பதால், அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என முதல்வர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதை தெரிந்து கொண்டு, அடுத்த நாள் அவர் ராஜினாமா செய்வது போல் செய்துள்ளார். அதனால் ராஜினாமா அறிவிப்பு என்பது முதலில் நிகழவில்லை. தனக்கு கொடுத்த பதவியை அவர் இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தனது முகநூல் பக்கத்தில், கடந்த 2 ஆண்டுகளாக தமது துறைகள் சார்ந்து மேற்கொண்ட பணிகளை, 9 பக்கங்களில் பட்டியலிட்டும், ஆளுநர் தமது செயல்பாடுகளை ஏற்கெனவே பாராட்டியது குறித்தும் சுட்டிக்காட்டியும் அமைச்சர் சந்திர பிரியங்கா பதிவிட்டிருந்தார். இதனிடையே, தொடர்ந்து புதுச்சேரியில் இருந்த சந்திர பிரியங்கா, இந்நிகழ்வுகள் தொடர்பாக இதுவரை எவ்வித கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அரசு மற்றும் வெளி நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர், காரைக்கால் மாவட்டத்தில் தமது நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் சார்பில் ஒரு செய்திக் குறிப்பும் சமூக ஊடக குழுக்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் சந்திர பிரியங்கா என்றும், புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் அலுவலகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் ராஜினாமாக கடிதம் ஏற்கப்பட்டதாகவோ, அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதாகவோ இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதனால் அவர் அமைச்சராக நீடிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும், ராஜினாமா செய்வதாக அறிவித்தப் பின்னர், தம்மை அமைச்சராக குறிப்பிட்டு அவரே செய்தி பகிர்ந்துள்ளதும் பேசு பொருளாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT