Published : 19 Oct 2023 05:38 PM
Last Updated : 19 Oct 2023 05:38 PM
புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் ஆர்வத்தில் தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பிக்கள் மக்கள் சந்திப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடனும், ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகள் சிவகங்கையுடனும், விராலிமலை தொகுதி கரூருடனும், அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 4 மக்களவைத் தொகுதிகளில் திருச்சி (சு.திருநாவுக்கரசர்), கரூர் (செ.ஜோதிமணி), சிவகங்கை (கார்த்தி சிதம்பரம்) ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பி.க்களும், ராமநாதபுரத்தில் (நவாஸ்கனி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பியும் உள்ளனர்.
நம்பிக்கையுடன் 3 பேர்: இவர்களில், ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி அவ்வளவாக அறந்தாங்கி பகுதிக்கு வருவதில்லை. ஆனால், மற்ற 3 எம்.பி.க்களும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனினும், மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து 3 காங்கிரஸ் எம்.பிக்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வட்டமடிக்கத் தொடங்கி உள்ளனர். 3 பேருமே மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
புதுக்கோட்டை நிகழ்ச்சியில் இரு தினங்களுக்கு முன்பு கலந்துகொண்ட திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர், இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புகிறேன் என்று கூறியதுடன், ஊர் ஊராக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், தொகுதி நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். புதுக்கோட்டையில் தனியார் வேலைவாய்ப்பு முகாமையும் நடத்தினார். தற்போது, தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதால், இம்முறையும் திருச்சி தொகுதியையே கூட்டணிக் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வாங்கிக் கொடுப்பார்கள் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஒரே நாளில் 10 கிராமம்: இதேபோல, கரூர் எம்.பி ஜோதிமணியும் விராலிமலை தொகுதியில் எந்தவித திட்டமிடல் பணியும் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் கடந்த சில நாட்களாக சந்தித்து வருகிறார். ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்று ஆலோசனை நடத்தினார். அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போதுகூட, விடுபட்ட கோரிக்கைகளை அடுத்த முறை நிறைவேற்றித் தருகிறேன் என வாக்குறுதி அளித்ததுடன், கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புவதாகவும் மக்களிடம் அவர் தெரிவித்து வருகிறார்.
இவர்கள் இவ்வாறு இருக்க, சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம், தனியாகவும், தனது தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடனும் சேர்ந்து அடிக்கடி ஆலங்குடி மற்றும் திருமயம் ஆகிய தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறார்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அண்மைக் காலமாக அதை தீவிரப்படுத்தியதுடன், ஆங்காங்கே எம்.பி நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்ட பணிகளை திறந்து வைத்தும் வருகிறார். இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன் என்று கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாக கூறாவிட்டாலும், அவரது செயல்பாடுகள் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதை காட்டுவதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர். தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுக்கு முன்னரே காங்கிரஸ் எம்.பி.க்கள் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கான பணியில் ஆர்வம் காட்டி வருவது அரசியல் பார்வையாளர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT