Published : 19 Oct 2023 01:46 PM
Last Updated : 19 Oct 2023 01:46 PM
புதுச்சேரி: உடைந்து இரண்டு ஆண்டுகளாகியும் புதிதாக செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணை கட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கனமழை பொழிந்தாலும் தேக்கி வைக்க முடியாமல் சங்கராபரணி ஆற்று நீர் கடலில் சேரும் நிலை உருவாகியிருக்கிறது. இப்பகுதி நிலத்தடி நீர் மட்டமும் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுச்சேரியில் செல்லிப்பட்டு - பிள் ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்று வட்டார பகுதியில் 20 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு பெய்த மழையால், படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அணை பராமரிக்கப்படா ததால், 2021-ம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து போனது. இதனால் பல ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி, வீணாக கடலில் சென்று சேர்ந்தது.
அதிகரிக்கும் உப்புநீர்: புதுச்சேரியில் நகரில் பல முக்கியப் பகுதிகளில் நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. நகரப் பகுதிகளுக்கு குடிநீர் தர கிராமங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வர அரசு திட்டமிட்டது. அதற்கு, கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டத்தை அரசு கைவிட்டது. தற்போது கடல்நீரை குடிநீராக்க மத்திய அரசு உதவியை நாடியுள்ளது. தற்போதுள்ள சூழலில், கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பது, கிராமப் பகுதிகளுக்கும் வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதைத்தடுக்க சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "வீடுர் அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. வீடுர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு தண்ணீர் அதிகளவில் கிடைக்கிறது. ஊசுட்டேரிக்கும் வரத்து அதிகரிக்கிறது. சங்கராபரணி ஆறானது புதுச்சேரியில் 30 கி.மீ தொலைவுக்கு செல்கிறது.
இதில், 3 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டி தேக்கினால், நிலத்தடி நீர் மேம்படும். மேலும், மழைக் காலத்துக்குள் நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும். ஏரிகளுக்கு வரும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.
பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அணையை பாதுகாக்க புதுச்சேரி பொதுப்பணித்துறை தவறியதால் அணை உடைந்ததாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே அணை உடைந்த பகுதியின் அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் சுமார் ரூ.20.40 கோடி செலவில், புதிய தடுப்பணை கட்ட புதுச்சேரி அரசு முடிவு செய்தது. ஆனால். அதற்கான பணிகளை இதுவரையிலும் தொடங்கவில்லை. தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் இரண்டு ஆண்டுகளாக சுற்று வட்டார நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது. இதனால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணை முற்றிலும் உடைந்துள்ளதால் மழை நீர் தேங்காமல் கடலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. இதைக் கண்டு இப்பகுதி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "அணையில் சிறிய உடைப்பு ஏற்பட்ட போதே அரசு கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டதால்தான், முழுமையாக உடைந்தது. ஆனால், அணை உடைந்து 2 ஆண்டுகளாகியும் புதிய அணை கட்டும் பணி தொடங்கப்படவில்லை.
இதற்காக போராட்டம் நடத்தினோம். அமைச்சர் வந்து பார்த்தார். அதைத் தொடர்ந்து, ரூ.20 கோடியில் புதிதாக படுகை அணை கட்ட டெண்டர் கோரப்பட்டது. தொழில்நுட்ப விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. நடைமுறை சிக்கலால் அது ரத்தானது. இந்தச் சிக்கலால் இரண்டு ஆண்டுகளாக மழைநீரை தேக்கி வைக்க முடியவில்லை. அனைத்து நீரும் கடலில் தான் சேர்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வருகிறது. இது விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் குடிநீருக்கும் பிரச்சினையை உருவாக்கும்" என்கின் றனர் வேதனையுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT