Published : 19 Oct 2023 02:05 PM
Last Updated : 19 Oct 2023 02:05 PM
மதுரை: கனிமவள கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை வழக்குப் பதிவு செய்த 30 நாளில் பறிமுதல் செய்ய உரிய வழிகாட்டுதல்களை டிஜிபி பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மணல் உள்ளிட்ட கனிமவள திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பக் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: கனிம வள பாதுகாப்பு சட்டத்தை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தாததால் சட்டவிரோத கனிம கொள்ளை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்க பயன்படுத்தப்படும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதில்லை.
தமிழகத்தில் 2015 மே மாதம் முதல் இந்தாண்டு வரை கனிமவள கடத்தல் தொடர்பாக 59 ஆயிரத்து 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கடத்தலில் 63 ஆயிரத்து 542 வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால் 2218 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கனிம கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுகின்றனர். முந்தைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை மீண்டும் கனிம வள கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். கனிமவள கொள்ளையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் கனிம கொள்ளை வழக்குப் பதிவு செய்த 30 நாளில் வாகனங்களை பறிமுதல் செய்ய தேவையான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி பிறப்பிக்க வேண்டும். கனிமவள கொள்ளை வழக்குகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். மனுதாரர்கள் வாகனங்களை கீழமை நீதிமன்றங்களை அணுகலாம்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT