Published : 16 Jan 2018 11:39 AM
Last Updated : 16 Jan 2018 11:39 AM
தை அமாவாசை புண்ணிய நாள் இன்று. இதையொட்டி, ராமேஸ்வரம், திருச்சி காவிரிக்கரை அம்மா மண்டபம் உள்ளிட்ட புனித நதிக்கரைகளிலும் கடற்கரைகளிலும் முன்னோர் ஆராதனை செய்து வழிபட்டனர் மக்கள்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை என வருடத்தில் மூன்று முக்கியமான அமாவாசைகள் உண்டு. இந்த அமாவாசைகளில், தவறாமல் பித்ருக்களுக்கான வழிபாடுகளைச் செய்து வணங்குவது வளம் தரும், பலம் சேர்க்கும், பாவங்களைத் தீர்த்து புண்ணியங்களைத் தந்தருளும் என்கின்றன சாஸ்திரங்கள்.
அத்தகைய நாட்களில், கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், புண்ணிய தீர்த்தங்களிலும், சமுத்திரங்களிலும் புனித நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். முன்னோர்களின் பூரண ஆசிர்வாதம் கிடைத்தே தீரும்.
இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதிகாலையிலேயே ராமேஸ்வரம் புனிதத் தலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள், கடலில் நீராடி. முன்னோர்களுக்கான ஆராதனைக் காரியங்களைச் செய்தார்கள்.
தில தர்ப்பணம் என்று சொல்லப்படும் எள்ளால் ஆன தர்ப்பணங்களைச் செய்தனர். சிலர் ஹோமங்கள் செய்து தர்ப்பணமும் கோ தானம் செய்து தர்ப்பணமும் செய்து அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்ப பித்ரு தர்ப்பணம் செய்தார்கள்.
திருச்சி அம்மா மண்டபம்
காவிரி நதி பாய்ந்தோடும் நகரங்களில் முக்கியமானது மலைக்கோட்டை மாநகரம் என்று சொல்லப்படும் திருச்சி மாநகரம். இங்கே அகண்ட காவிரியாக பாய்ந்தோடும் அழகே அழகு. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், காவிரிக்கரையில் பல்லாயிரக் கணக்கான மக்கள், தர்ப்பணம் செய்து முன்னோர்களைப் பிரார்த்தனை செய்து வழிபட்டார்கள்.
தஞ்சை திருவையாறு
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு காவிரிக்கரை படித்துறையில், முன்னோர்களுக்கான ஆராதனைகளைச் செய்வது மிகவும் உன்னதமானது என்று போற்றுகிறார்கள். அதிகாலையிலேயே தஞ்சாவூர், ஒரத்தநாடு, வல்லம், அரியலூர், திருமானூர், வல்லம், பள்ளி அக்ரஹாரம், கரந்தை, கந்தர்வகோட்டை முதலான பல ஊர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் திருவையாறு படித்துறைக்கு வந்து, முன்னோருக்கான ஆராதனைகளையும் தர்ப்பணங்களையும் செய்து வழிபட்டு, காவிரியில் நீராடினார்கள்.
இதேபோல், மயிலாடுதுறை காவிரிக்கரையிலும் கும்பகோணம் காவிரிக்கரையிலும் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபட்டார்கள். திருவாரூருக்கு அருகில் உள்ள தில தர்ப்பணபுரி எனும் புண்ணிய க்ஷேத்திரம் வெகு பிரசித்தம். ஊரின் பெயரே பித்ருக்களுக்கான கடமையைச் செய்யும் தலம் என்பதை உணர்த்துகிறது அல்லவா. திலம் என்றால் எள்ளு. திலதர்ப்பணம் என்றால், எள்ளு கொண்டு தர்ப்பணம் செய்வது என்று அர்த்தம்.
பவானி கூடுதுறை
ஈரோடு மாவட்டம் பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் கூடுதுறையிலும் கொடுமுடி ஸ்ரீமகுடேஸ்வரர் கோயில் அமைந்துள்ள காவிரிக் கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தர்ப்பணம் செய்து, பித்ருக் கடமைகளை செவ்வனே செய்தார்கள்.
மயிலாப்பூர் குளக்கரை
சென்னையில், மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் குளக்கரையிலும் மாம்பலம் அயோத்தியா மண்டபத்திலும் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தை மாத அமாவாசை வழிபாட்டைச் செய்தார்கள். புண்ணிய நதிகளிலும் கடல் தீர்த்தத்திலும் நீராடினார்கள்.
இந்த நாளில் தானங்கள் செய்து புண்ணியங்களைத் தரும். பாவங்களைப் போக்கும் என்பதால், அரிசி, வாழைக்காய், வெல்லம், உப்பு, நெய், வஸ்திரம் முதலான தானங்களைச் செய்து வழிபட்டு, முன்னோரை வேண்டிக் கொண்டார்கள்.
நெல்லை தாமிரபரணி
திருநெல்வேலியின் தாமிரபரணி ஆற்றங்கரையிலும் வல்லநாட்டில் உள்ள தசாவதாரக் கட்டம் என்று சொல்லப்படும் புராதனப் பெருமை கொண்ட இடத்திலும் ஏராளமான மக்கள், தர்ப்பணம் செய்து, முன்னோர் ஆராதனை செய்து வழிபட்டார்கள்.
தை அமாவாசையில், முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்து, நம்மால் முடிந்த அளவுக்கு நான்கைந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கினால், வாழ்வில் துக்கங்கள் நீங்கும். தடைகள் விலகும். வீட்டின் தரித்திர நிலை அகலும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும் என்பது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT