Published : 19 Oct 2023 05:15 AM
Last Updated : 19 Oct 2023 05:15 AM
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்து வருகிறது. பொதுவாக, குளிர்காலத்தில் மின்தேவை குறைந்தும், கோடையில் உயர்ந்தும் காணப்படும்.
கடந்த ஏப்.20-ம் தேதி தினசரி மின்தேவை 19,347 மெகாவாட் அளவை எட்டியது. வரும் 2024-ம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே தினசரி மின்தேவை 17 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என தென்மண்டல எரிசக்தி குழு கணித்துள்ளது.
அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மின்விநியோக கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் தற்போது, 33, 66, 110, 230 மற்றும் 430 கிலோவோல்ட் ஆகிய திறன்கொண்ட துணை மின்நிலையங்கள் மட்டுமே உள்ள நிலையில், மின்வாரியத்தின் மின் தொடரமைப்பு கழகம் (டான்டிராஸ்கோ) மூலம் 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின்நிலையங்களை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வடசென்னை, அரியலூர், கோவை, விருதுநகரில் இந்த துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக வடசென்னை, அரியலூரில் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகின்றன. விருதுநகரில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. கோவையில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
வடசென்னை அனல்மின் நிலையத்தின் 3-வது நிலையில் வரும் டிசம்பரில் மின்உற்பத்தி தொடங்கப்படும். அப்போது, இந்த புதிய துணை மின்நிலையம் மூலமாக சுற்றுவட்டார பகுதிகளுக்கு எளிதாக மின்விநியோகம் செய்யமுடியும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT