Published : 19 Oct 2023 07:10 AM
Last Updated : 19 Oct 2023 07:10 AM
சென்னை: காசா பகுதியில் நடந்து வரும் போரை ஐ.நா. சபையும், அனைத்து உலக நாடுகளும் ஓரணியாக நின்று, இந்த கொடும் போரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: போர் என்பதே கொடூரமானது. அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள் தான். காசா பகுதியில் கடந்த 10 நாட்களாக நடந்துவரும் போர், உலக மக்கள் அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது.
உயிருக்கு பயந்து லட்சக் கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காய மடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர், உணவின்றி தவிப்போரின் வேதனையும் இதயம் உள்ளோர் அனைவரையும் கலங்க வைக்கின்றன. ‘போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படக் கூடாது’ என்பதை மீறி, மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மனிதம் மரத்துப்போய்விட்டதா?
உலக சமுதாயம் இனியும் இதை கைகட்டி வேடிக்கை பார்க்க கூடாது. ஐ.நா. சபை, அனைத்து உலக நாடுகள் ஓரணியாக நின்று, இந்த கொடும் போரை தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி பொது மக்களின் உயிர்களை காக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT