Published : 19 Oct 2023 05:34 AM
Last Updated : 19 Oct 2023 05:34 AM

சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகம் முழுவதும் 3 தளங்கள், 10 வீடுகள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் கட்டண வசூல் நிறுத்தப்படுவதாகவும் அறிவித்தார்.

‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அடுத்த மறைமலை நகரில் கடந்த 2 நாட்களாக நடந்தது.

நேற்று நடந்த மாவட்ட ஆட்சியர்கள், துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தின் நிறைவாக, 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சென்னை ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் (ஐ.டி.காரிடார்) உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது, இந்த அரசு பதவி ஏற்றவுடன், கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோர், தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிவோர் பெரும் பயனடைந்தனர்.

இந்த சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடந்து வருவதால், சாலையின் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டணச் சாவடியிலும் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று, அக்.19 (இன்று) முதல் நாவலூர் சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும்.

மின் கட்டணம் குறைப்பு: சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ளன. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின் கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டன.

இதனால், பொது வசதிகளுக்கான மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8-க்கு மேல் செலுத்த வேண்டி உள்ளது. சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்களை இது பாதிப்பதாக குடியிருப்போர் நலச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொது பயன்பாட்டுக்கான புதிய சலுகை கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி, பொது பயன்பாட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறையும். இதனால் தமிழகம் முழுவதும் சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x