Published : 18 Oct 2023 08:33 PM
Last Updated : 18 Oct 2023 08:33 PM

“மீண்டும் ஏமாற்றும் செயல்” - முதல்வரின் மின் கட்டண அறிவிப்புக்கு அன்புமணி, தினகரன் காட்டம்

சென்னை: “பெயரளவுக்கு குறைக்கக் கூடாது; அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின் கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8 ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் எதிர்பார்ப்புகளில் சிறிய அளவைக் கூட நிறைவேற்றாத இந்த அறிவிப்பால் எந்த பயனும் இல்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், பொதுப்பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப்பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது. அதனால் பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் 15 மடங்கு அதிகரித்தது.

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு மின்கட்டண உயர்வுக்கு முன்பாக பொதுப்பயன்பாட்டுக்காக 150 அலகுகள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அதற்கான கட்டணமாக ரூ.112.50 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே அளவு மின்சாரப் பயன்பாட்டுக்கு ரூ.1600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக உயர்வு ஆகும். இப்போது முதலமைச்சர் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பின்படி, இனி 150 அலகு பயன்பாட்டிற்கு ரூ. 1225 கட்டணம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட 11 மடங்கு அதிகம் ஆகும். பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை 15 மடங்கு உயர்த்தி விட்டு, அதில் மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பது எந்த வகையில் நியாயம்?

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்கட்டணம் மக்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து மக்களை ஓரளவாவது காப்பாற்ற, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும். முன்பு வழங்கப்பட்டதைப் போல பொதுப்பயன்பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

தினகரன் விமர்சனம்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல். பொதுப் பயன்பாட்டுக்கான புதிய மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டு வருவதே, மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வாக அமையும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்பட்ட மின்கட்டண சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு புதிய மின் கட்டண உயர்வின் படி யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதால் மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் மின் தூக்கி வசதியில்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தும் போது பன்மடங்கு உயர்த்திவிட்டு குறைக்கும் போது மட்டும் சொற்ப அளவிலேயே குறைப்பதா என அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் முதலமைச்சரை நோக்கி கேள்விகள் எழுப்புவதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வால் பாதிப்பைச் சந்தித்து வரும் பொதுமக்களை மீண்டும் ஏமாற்றாமல், புதிய மின் கட்டண முறையை முழுமையாக ரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் இருந்த நடைமுறையைக் கொண்டு வருவதே தீர்வாக அமையும் என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்திகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x