Published : 18 Oct 2023 12:03 PM
Last Updated : 18 Oct 2023 12:03 PM
கள்ளக்குறிச்சி: “கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைக்கப்படும்” என கடந்த 2011-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியும் இதுவரை முடிக்கப்படாமல் மந்த கதியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்டு கள்ளக்குறிச்சி நகர வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
“சின்னசேலம் - கள்ளக்குறிச்சி இடையே ரூ.116.61 கோடி மதிப்பீட்டில் 16.2 கி.மீ தொலைவுக்கு இருப்பு பாதை அமைத்து, கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைக்கப்படும்” என்று கடந்த 2011-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியிட்டும் உடனடியாக பணிகள் தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. ஒரு வழியாக இதற்கான பூர்வாங்கப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது.
இந்த புதிய அகல ரயில் பாதைக்கு அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் அப்போதைய ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி காமராஜ், முன்னாள் எம்எல்ஏ அழகுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தடபுடலாக தொடக்க நிகழ்வு நடந்து, அதன்பிறகு மிகமிக மெதுவாக பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிக்காக, கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே 11 கிராமங்களில் இருந்து 47.87 ஹெக்டேர் விளைநிலங்கள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதில் 35.77 ஹெக்டேர் விளைநிலங்iகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பாதையில் பெரிய பாலங்கள் - 2, சிறிய பாலங்கள் -22, சாலை மேம்பாலம் -1, சாலை கீழ் பாலங்கள் 10, மனிதர்கள் கடக்கக் கூடிய லெவல் கிராசிங்குகள் - 3 இடம் பெறவுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ரயில் நிலையம் வந்தபாடில்லை என கள்ளக்குறிச்சி நகர மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ரயில் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து சர்ச்சை நீடித்து வந்த நிலையில், தற்போது கள்ளக்குறிச்சிக்கான ரயில் நிலையத்தை அருகில் உள்ள பொற்படாக்குறிச்சியில் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிர்வாக உத்தரவு கடந்த மாதம் 9-ம் தேதி, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைந்தால், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தை சுற்றியுள்ள பல நவீன அரிசி ஆலைகள், சாகோ (மரவள்ளிக் கிழங்கு மாவு) தொழிற்சாலைகள், ஜவுளி ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கும்.
இருப்பு பாதை இல்லா பிரதேசமாக இருந்த கள்ளக்குறிச்சிக்கு சின்னசேலத்துடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த புதிய அகல ரயில் பாதை மிகவும் தேவை. புதிய இருப்பு பாதையுடன் கூடிய ரயில் நிலையத்தால் சேலத்துடன் நெருங்கிய வணிகத் தொடர்பு ஏற்படும் கள்ளக்குறிச்சி நகர வணிக நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு இது வித்திடும்.
இப்பகுதி விவசாயிகளின் விளைபொருட்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, சந்தைப்படுத்துவதற்கான சூழல் உருவாகும். ஆனால், இதற்கான பணிகளை இழுத்தடித்து நடத்துவதால் நகர மக்கள், இந்த விஷயத்தில் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர்.
“2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் நடைமுறைக்கு வர இத்தனை காலமா? இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ரயில் நிலையத்துக்கான இடம் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இன்னும் எத்தனை எத்தனை இழுத்தடிப்புகள், சோதனைகளைக் கடந்து இந்த ரயில் நிலையம் வருமோ!” என்று நகர மக்கள் ஆதங்கத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதே கேள்விகள் நமக்குள்ளும் தொடர்கின்றன.
இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில், இனியேனும் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் போதும். இதை முன்னெடுத்து செய்யும் தெற்கு ரயில்வே இப்பகுதி மக்களின் ஆதங்கத்தை புரிந்து அக்கறையோடு செயல்பட வேண்டியது அவசர அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT