Published : 18 Oct 2023 12:25 PM
Last Updated : 18 Oct 2023 12:25 PM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று (அக்.18) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு கடை ஒன்றில் பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் தயாரித்த போது வெடிவிபத்து ஏற்பட்டு 13 பேர் நேற்று உயிரிழந்தனர். உயிரிழந்தோர் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. உடல்கள் அனைத்தும் கருகி இருந்ததால் அடையாளம் காண முடியாமல் உறவினர்களும் குடும்பத்தினரும் தவித்தனர். உயிரிழந்தூர் குடும்பத்தினரை சந்தித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் ஆறுதல் கூறினார்.
அதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் அனைத்தும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்ட லட்சுமி, செல்லம்மாள், முத்துலட்சுமி, முனீஸ்வரி, பாக்கியலட்சுமி ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டன. ஆனால் அவர்களது உடல்களை பெற்றுச் செல்ல குடும்பத்தினரும் உறவினர்களும் மறுப்பு தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர்களுக்கு பட்டாசு கடை நிர்வாகம் சார்பில் தலா ரூ.5.50 லட்சம் தருவதாகவும், அரசு வழங்கும் நிதி உதவி ரூ.3 லட்சம் பெற்று தரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் எஸ்.பி. சூரியமூர்த்தி, டிஎஸ்பிக்கள் அர்ச்சனா, தனஜெயன், ஜெகநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு பாக்கியலட்சுமி என்பவரது சடலத்தை மட்டும் உறவினர்கள் வாங்கிச் சென்றனர். அவர்களிடம் பட்டாசு கடை நிர்வாகம் சார்பில் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன.
மேலும், போலீஸ் பாதுகாப்புடன் பாக்கியலட்சுமி சடலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் உயிரிழந்த மற்றவர்களின் சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT