Published : 18 Oct 2023 05:10 AM
Last Updated : 18 Oct 2023 05:10 AM
சென்னை: அதிமுகவின் 52-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க நாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகம் அமைந்திருக்கும் அவ்வை சண்முகம் சாலை முழுவதும் பேனரும், தோரணங்களும் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது. காலை முதலே சாலை நெடுகிலும் கட்சித் தொண்டர்கள் அணிவகுத்து நின்றிருந்தனர். தொடர்ந்து, 11 மணியளவில் கட்சித் தலைமையகத்துக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி வருகை தந்தார். அவரை நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆரவாரமாக வரவேற்றனர். அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து கட்சிக் கொடியை ஏற்றிய அவர், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பழனிசாமி, ஆக.20-ல்மதுரையில் நடந்த மாநாட்டுக்கு வந்துவிட்டு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.48 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
இதேபோல், விபத்துகளில் பலத்த காயமடைந்த 22 பேருக்கு ரூ.33 லட்சமும், லேசான காயமடைந்த 27 பேருக்கு ரூ.13.50 லட்சமும், கடந்த ஆண்டு பொதுக்குழுவில் பங்கேற்று திரும்பியபோது உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் உட்பட மொத்தம் 62 பேருக்குரூ.1.03 கோடிக்கான வரைவோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர், கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சா.கலைப்புனிதன் எழுதிய ‘புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் பொற்கால ஆட்சி ஒரு பார்வை’ என்ற நூலை பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டார்.
நிகழ்ச்சிகளில், அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், பொன்னையன், நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், கோகுல இந்திரா, பெஞ்சமின், பாண்டியராஜன், ைகைச் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பழனிசாமி தலைமையில் மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்து பழனிசாமி விரிவான ஆலோசனையை வழங்கினார்.
டிரெண்டிங்...: அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி, நேற்றைய தினம் ‘அதிமுகவும் - நானும்’ என்னும் பதிவு தேசிய அளவில் டிரெண்டானது.
எம்ஜிஆருக்கு ஓபிஎஸ் மரியாதை: அதிமுகவின் 52-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாலையெங்கும் அவரது அணியினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, எம்ஜிஆர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அங்கிருந்த தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். இதில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
‘பாஜகவுடன் கூட்டணி இல்லை என மக்களிடம் தெளிவுபடுத்துங்கள்'
மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது குறித்து கட்சி வட்டாரத்தினர் கூறியதாவது:
மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கான மாவட்டத்தில் பணிகளை மேற்பார்வையிடுங்கள். தேர்தல் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் தலையீடு இருந்தால் நேரடியாக தலைமையிடம் புகாரளிக்கலாம். மாவட்டச் செயலாளர்களுக்கு பயந்து அவர்கள் சொல்வதை கேட்டு நடக்காமல் கட்சிக்காக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள். பொறுப்பாளர்களுடைய பணிகளையும் தலைமை நிர்வாகிகள் கண்காணிப்பார்கள். ஒரு பூத்துக்கு 19 பேர் இருக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு தோராயமாக 2,000 பூத்கள் வருகின்றன. 19 பேரில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணிக்கு வர பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்க திட்டமிடுகிறோம். எனவே, கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். அதேநேரம், பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. இதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். 40 தொகுதிகளையும் வசப்படுத்தினால் மட்டுமே மத்தியில் அமையும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும். இவ்வாறு பழனிசாமி பேசியதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT