Published : 07 Jan 2018 11:16 AM
Last Updated : 07 Jan 2018 11:16 AM
போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட சில தொழிற்சங்கங்களின் துணையோடு சில இடங்களில் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும், 30 சதவீதத்துக்கும் குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தொழிலாளர்களை நியமிக்க போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கான அறிவிப்பு தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியில் சேர தகுதியுள்ள கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்துள்ளவர்களின் பட்டியலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) மூலம் சேகரிக்கப் பட்டுள்ளன.
பேருந்து இயக்குவதில் சிரமம்
அதன்படி கடந்த 2 நாட்களில் சுமார் 6 ஆயிரம் பேரின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பேருந்துகளை இயக்க போலீஸார் மூலம் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. ஆனால், காலாவதியான பேருந்துகளை தொடர்ந்து ஓட்ட முடியாமல், பலர் சொல்லாமலேயே ஓடி விடுகின்றனர் என போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் புலம்புகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து கழக கிளை மேலாளர்களிடம் கேட்டபோது, ‘‘பேருந்துகளை எப்படியாவது இயக்க வேண்டுமென தலைமை நிர்வாகம் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு (ஆர்டிஓ) சென்று கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்திருப்பவர்களின் பட்டியலை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை தேடும்போது, பாதி பேர் சொந்த ஊரிலேயே இல்லை. மீதமுள்ளவர்களை அழைத்து வந்து பேருந்துகளை இயக்கினால், அதிலும், சிலர் பாழடைந்துள்ள பேருந்துகளை இயக்குவதில் கடும் சிரமாக இருப்பதாக கூறி விட்டு சென்று விடுகிறார்கள். சென்னை போன்ற பெரிய நகரங்களில் குறுகிய பாதைகள், சிதிலமடைந்த சாலைகளும் மற்றொரு காரணமாக இருக்கிறது. இதுவரையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 6000-க்கும் மேற்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் வரை திரும்பிச் சென்று விட்டனர்’’ என்றனர்.
செல்போன் மூலம் உத்தரவு
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக முழு அளவில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால், மாற்று ஏற்பாடுகள் மூலம் எங்களால் முடிந்த வரையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டுமென நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதுவரையில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு செல்போன் மூலம் பணிக்கு வருமாறு குறுந்தகவல் அனுப்பியுள்ளோம். பணிக்கு திரும்பாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் நிர்வாகம் தயங்காது’’ என்றார்.
தொழிற்சாலை பேருந்துகள்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலையில் அரசு பேருந்துகளுக்காக சென்னை புறநகரில் அமைந்துள்ள வெளிவட்ட சாலை பகுதியில் ஆங்காங்கே மக்கள் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட தொழிற்பேட்டைக்கு சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்துகளை போலீஸார் மறித்து, பொதுமக்களை அனுப்பி வைத்தனர். இதற்காக, பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT