Published : 17 Oct 2023 03:18 PM
Last Updated : 17 Oct 2023 03:18 PM
கள்ளக்குறிச்சி: இரு தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து, திருநாவலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டிலும், பக்கவாட்டிலும் தொங்கியபடி சென்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, உளுந்தூர்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார், அந்த தனியார் பேருந்தை அடையாளம் கண்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அதிக பாரம் ஏற்றியதாக அபராதமும், பயணிகளை படிக்கட்டில் தொங்கியபடி ஏற்றிச் சென்றதற்காக எச்சரிக்கையும் விடுத்தனர்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பள்ளிக்குச் செல்ல ஏதுவாக 6 முதல் பிளஸ் 2 வரை பயில்வோருக்கு இலவச பேருந்து பயண அட்டையும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டியும் வழங்கப்படுகிறது. கிராமப் பகுதிகளில் இதை பயன்படுத்தியே பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
மேல்நிலை அளவில் பயிலும் மாணவர்களில் சிலர், அரசு வழங்கிய இலவச சைக்கிளை பயன்படுத்தாமல், அரசுப் பேருந்திலோ அல்லது தனியார் பேருந்திலோ செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு செல்லும்போது, பேருந்தினுள் போதிய இருக்கை இருந்தாலும் அதில் அமராமல் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்வதும், கூச்சலிடுவதுமாக உள்ளனர். மேலும், அருவெறுக்கத்தக்க சொற்களைப் பயன்படுத்தி பாட்டு பாடுவதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். பேருந்தில் பயணிக்கும் சக பயணிகளை முகம்சுளிக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
இப்படிச் செய்யக்கூடாது என்று நடத்துநர், ஓட்டுநர் அறிவுறுத்தினாலும் அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இப்படி இருக்கும் சூழலில்தான் மேலே சுட்டிக்காட்டிய சம்பவம் நடந்து, அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பேருந்து ஊழியர்கள் கூறுகையில், “எங்கள் பேருந்து செல்வதற்கு 5 நிமிடங்கள் முன்னதாக மாணவர்கள் இலவசமாக பயணிக்க தடம் எண் 35 அரசுப் பேருந்து தயாராக இருந்த போதிலும், அதைத் தவிர்த்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண் பிள்ளைகள் அதிகம் பயணிக்கக் கூடிய தனியார் பேருந்தில் ஏறி, இதுபோல் அழிச்சாட்டியம் செய்கின்றனர்.
‘ஹீரோயிஸம்’ என்று நினைத்து அவர்கள் செய்யும் தகாத செயல்களை, நாங்கள் பலமுறை கனிவுடன் கண்டித்திருக்கிறோம். எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். படிக்கட்டில் இதுபோல் தொற்றிக் கொண்டுசெல்லும் போது, தவறி கீழே விழுந்தாலும் எங்களுக்குத் தான் தண்டனை. இவர்களைக் கட்டுப்படுத்தாமல், மோட்டார் வாகனத் துறையினர் எங்களை பலிகடாவாக்குவது வேதனையாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவிக் கின்றனர்.
இதுபற்றி மோட்டார் வாகனத் துறையின ரிடம் கேட்போது, “மாணவர்களின் ஒழுங்கீனச்செயல்களை கட்டுப்படுத்த வேண்டிய ஆசிரியர்களின் கைகளே கட்டிப்போடப்பட்ட நிலையில் உள்ளது. நாங்கள் அவர்களை என்ன செய்வது? காவல் துறையினர்தான் இதில், சற்று தீவிரம் காட்டி, இது போன்ற மாணவர்களை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டும்” என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT