Published : 17 Oct 2023 02:02 PM
Last Updated : 17 Oct 2023 02:02 PM
புதுச்சேரி: “ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரரை நோக்கி எழுப்பபப்பட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர், "நம் நாட்டின் முயற்சியில் விண்கலம் மேலே எழும்போது 'வந்தே மாதரம்' என கோஷம் எழுப்பியதாக அப்துல் கலாம் தன் சுய சரிதையில் எழுதி உள்ளார். அப்படித்தான் வெற்றி என்று வரும் போது உள் உணர்வோடு கிரிக்கெட் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.
"ஜெய் ஸ்ரீராம்" என்பது நாட்டின் வெற்றியைக் குறிக்க வேண்டும் என அவர்கள் நினைத்துள்ளனர். அதில் மதம் இருந்ததாக நான் பார்க்கவில்லை. அதில் வெற்றி உணர்வு இருந்ததாகத்தான் பார்க்கிறேன். நாடு வெற்றி பெற்றது என்பது தொடர்பாக சொல்லக் கூடிய வார்த்தையாகத்தான் பார்க்கிறேன். எனவே, ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை மதம் சார்ந்தாக பார்க்கவில்லை, வெற்றி உணர்வு சார்ந்ததாகத்தான் நான் பார்க்கிறேன்.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தும் அளவுக்கு தேசிய கல்விக் கொள்கையில் தவறானது எதுவும் இல்லை. இதனை நான் அவர்களை சந்தித்துப் புரியவைப்பேன். வகுப்பறையில் இருந்து உலக அளவில் மாணவர்களை நான் கொண்டு செல்வேன் என பிரதமர் கூறி உள்ளார். பல லட்சக்கணக்கான பேரிடம் கருத்து கேட்டுத்தான் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புரிதல் இல்லாமல் சில மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் என்னை வந்து சந்திக்கலாம். தாய்மொழியை ஊக்கப்படுத்துவதுதான் புதிய கல்விக் கொள்கை. யாரும் தமிழுக்கு எதிரானவர்கள் இல்லை. அதனால், போராட்டம் தேவையில்லை. பேச்சுவார்த்தையே போதுமானது. பிரதமர் மோடி ஆட்சியில் தாய்மொழிக்கு பங்கம் வர வாய்ப்பு இல்லை" என்று தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT