Published : 17 Oct 2023 07:52 AM
Last Updated : 17 Oct 2023 07:52 AM

சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி, பேரவை செயலர் பதில் மனு

சென்னை: சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், திமுகஎம்.பி ஆ.ராசாவும் பேசியிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும்என பேசிவிட்டு எந்த தகுதியின் அடிப்படையில் மூவரும் மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் நீடிக்கின்றனர் என்பதை விளக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது உதயநிதி தரப்பிலும், சட்டப்பேரவைச் செயலர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, மனுஸ்மிருதி, சனாதனம் ஆகியவற்றையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் உத்தரவுகளையும் மேற்கோள்காட்டி வாதிட்டார். தொடர்ந்து அவர் வாதிட்டதாவது:

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? மனுதாரர்களுக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதில் இருந்தே இந்த வழக்கில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது என்பது தெளிவாகிறது.

உரிய தகுதியில்லாமல் பதவிவகித்தால் மட்டுமே எந்த தகுதியின்அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கோரி கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்ய முடியும். சனாதனம் குறித்து அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சாதி, மத அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும்,அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும்தான் உதயநிதிபேசியுள்ளார். இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக குற்றம்சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் அக்.31-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அன்றையதினம் அந்த நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ், அதில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உதயநிதி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x