Published : 17 Oct 2023 05:14 AM
Last Updated : 17 Oct 2023 05:14 AM
சென்னை: அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க நாளில் திமுக ஆட்சியை அகற்ற சூளுரைப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ் நாட்டைக் காக்க எம்ஜிஆர் 1972 அக்.17-ம் தேதி அதிமுகவை தொடங்கினார். 1977-ம் ஆண்டு முதன்முறையாக தமிழ் நாட்டில் ஆட்சியை அதிமுக கைப்பற்றியது. இக்கட்சி ஏழை, எளியோர் உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எம்ஜிஆர் தலைமையில் தமிழ் நாட்டில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டது.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அதிமுகவை கட்டிக் காத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டம்; 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்பு, அம்மா உணவகம், மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணினி என்று எண்ணற்ற சாதனைகளை படைத்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, எதிரிகளும், துரோகிகளும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நின்று, அதிமுகவை அழிக்கத் துடித்த நேரத்தில், அனைத்து சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி கட்சியை மீட்டிருக்கிறோம். அதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில், தொண்டர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 29 மாத கால திமுக ஆட்சி, தமிழ் நாட்டின் உரிமைகளை காவு கொடுத்து மக்களின் வாழ்வை துயர் மிகுந்ததாக மாற்றிவிட்டது. மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு என்று மக்களை துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மக்களை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது எனும் வெற்றிச் செய்தி தான், தமிழ் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக அமையும் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
அதிமுக 52-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், காவிரி உரிமையை காவு கொடுத்து, விவசாயிகளை அழிக்கத் துடிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆட்சியை அகற்ற நாம் அனைவரும் சூளுரை ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT