Published : 17 Oct 2023 05:27 AM
Last Updated : 17 Oct 2023 05:27 AM

நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களைப் பிடித்து பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி

அவிநாசியில் ‘என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட யாத்திரையை நேற்று தொடங்கி வைத்து, அவிநாசி நகரில் பாதயாத்திரை மேற்கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர்.

திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களைப் பிடித்து பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

‘என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட யாத்திரையை திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிந்தாமணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கினார். இதனை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அவிநாசி சிந்தாமணியில் தொடங்கி அவிநாசி சேவூர் சாலை,கச்சேரி வீதி, வடக்கு, கிழக்கு ரதவீதிகள் கோவை பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாகபுதிய பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மத்தியஅமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘இந்த யாத்திரை முடிவில், திமுக அரசு தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படும்’’ என்றார்.

தொடர்ந்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

சட்டம் - ஒழுங்கு பின்னடைவு: இந்தியாவில் அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சட்டம் - ஒழுங்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது. விசைத்தறி, நெசவாளர்கள், மக்களுக்கு தேவையான குடிநீர், விவசாயிகளுக்கு தேவையான பாசன நீர் உட்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. காந்தி, விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட சனாதனத்தை இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். வரும் தேர்தலில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராசா உட்பட அனைவரும் தோற் கடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிய தாவது: நாடு முழுவதும் 1992-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரை 25 ஆண்டுகளில் 1,200 தொன்மை வாய்ந்த சிலைகள் காணாமல் போயுள்ளன. 2014-ம் ஆண்டு தொடங்கி 2023-ம் ஆண்டு வரை 361 சிலைகளை பிரதமர் மோடி மீட்டுள்ளார். இதில் தமிழகத்தில் திருடப்பட்ட சிலைகளும் உள்ளன.

1985-ம் ஆண்டு 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்தது. 2023-ம்ஆண்டு கணக்குப்படி, 3.25 லட்சம்ஏக்கர் தான் உள்ளது. 40 ஆண்டுகளில் 2 லட்சம் ஏக்கர் நிலத்தை காணவில்லை.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில், நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி, நெசவாளர்களிடம் பள்ளிச் சீருடை, நூலுக்கு அரசு கொள்முதல் அமைப்போம் என்றார்கள். இவற்றை செய்தார்களா? சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு பெற, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வரும்தேர்தலில் 400 இடங்களை பிடித்து,பாஜக கூட்டணி மத்தியில் வலுவாக ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x