Published : 25 Jan 2018 02:47 PM
Last Updated : 25 Jan 2018 02:47 PM
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை உட்பட 6 நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் இன்று (வியாழக்கிழமை) காலை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
இவரது கணவர் நடராஜன் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும் திருச்சி சட்டக்கல்லூரியிலும் படிப்பை முடித்த அலமேலு நடராஜன், 1991-ம் ஆண்டு நீதிபதியாக பதவியேற்று இருக்கிறார். முதலில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்ற அவர் பின்னர் கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு, திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் உடுமலையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கை விசாரித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இந்த வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கினார். நாட்டிலேயே முதன்முறையாக சாதி ஆணவப் படுகொலைக்கு தூக்கு தண்டனை விதித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
நீதிபதி அலமேலுவுக்கு அண்மைக்காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதற்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், இன்று காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொடர்ந்து உயிர் பிரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT