Published : 16 Oct 2023 11:11 PM
Last Updated : 16 Oct 2023 11:11 PM
நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பெண் மகப்பேறு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி நாகதேவிக்கு சமீபத்தில் பிறந்த மூன்றாவது பெண் குழந்தையை விற்பனை செய்வதற்காக பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருச்செங்கோடு அரசு பெண் மகப்பேறு மருத்துவர் அனுராதா மற்றும் குழந்தையை விற்பனை செய்யும் புரோக்கர் லோகாம்பாள் ஆகிய இருவரையும் திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தவிர பெண் மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதே வேளையில் குழந்தை விற்பனை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்செங்கோடு சேலம் சாலையில் பெண் மருத்துவர் அனுராதாவிற்கு சொந்தமான தனியார் கிளினிக் உள்ளது. அந்த கிளினிக்கிற்கு வருவாய் துறை அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர்.
அதுபோல் திருச்செங்கோடு தேர் நிலை அருகில் உள்ள அரசு மருத்துவமனை அறை ஒன்றை மருத்துவர் அனுராதா பயன்படுத்தி வந்தார். அந்த அறைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT