Published : 16 Oct 2023 02:37 PM
Last Updated : 16 Oct 2023 02:37 PM
திருச்சி: திருச்சி மாநகரில் செயல்படாமல் முடங்கியுள்ள கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருச்சி மாநகர காவல் துறையில் 2010- 2011 காலகட்டத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க கூடிய வகையில், கன்டோன்மென்ட் காவல் நிலைய வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது. இதனுடன் மாநகரில் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்ட 1,111 கேமராக்கள் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், போதிய பராமரிப்பின்மை, இயற்கை இடர்பாடுகள் போன்ற காரணங்களால் தற்போது 80 சதவீத கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை. மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள், தலைமை அஞ்சல் நிலையம், ஒத்தக்கடை, எம்ஜிஆர் சிலை போன்ற முக்கிய இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன.
மற்ற பெரும்பாலான இடங்களில் உள்ள கேமராக்கள் நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளன. இதில், மாநகருக்குட்பட்ட பகுதிகள் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கேமராக்களும் காட்சிப் பொருளாகவே உள்ளன.
தற்போதைய காலகட்டத்தில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இந்த நிலையில், மாநகரில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளதால், குற்றவாளிகளை கண்டறிவதிலும் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.அய்யாரப்பன் கூறியது: மாநகரில் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளதால், குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனம் மற்றும் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டுப் பெற்று துப்புத் துலக்க வேண்டி உள்ளது.
எனவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். இதுதொடர்பாக மாநகர காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியது: திருச்சி மாநகரில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT