Published : 16 Oct 2023 05:05 PM
Last Updated : 16 Oct 2023 05:05 PM

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகன் பொறுப்பேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதி என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக, நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் திங்கள்கிழமை (அக்.16) பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக, நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, பதவிப்பிரமானம் செய்துவைத்தார். இரு புதிய நீதிபதிகளையும், வரவேற்றுப் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து, தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றிருக்கும் இவர்கள் இருவரும் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், நீதிமன்றங்களில் மின்னணு முறையில் மனு தாக்கல் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசினர். ஏற்புரையாற்றிய இரு நீதிபதிகளும், தங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்குவதாக தெரிவித்தனர். இரண்டு புதிய நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து. காலியிடங்களின் எண்ணிக்கை 10-ஆக குறைந்துள்ளது.

நீதிபதி என்.செந்தில்குமார்: கடந்த 1970ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி, நாராயணசாமி - சங்கரவல்லி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தந்தை நாராயணசாமி ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். தாய் சங்கரவல்லி, அச்சரப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவாக 2006 முதல் 2011 வரை பணியாற்றியவர். சென்னை பெரம்பூரில் பள்ளி படிப்பை முடித்த நீதிபதி செந்தில்குமார் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரத்தின் ஜூனியராக தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

நீதிபதி அருள் முருகன்: கடந்த 1976 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி தருமபுரியில் கணபதி நீளாமணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். சேலத்தில் பள்ளி படிப்பையும், சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 1999 ஆம் ஆண்டு முதல் மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமியின் ஜூனியராக தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x