Published : 16 Oct 2023 02:19 PM
Last Updated : 16 Oct 2023 02:19 PM

‘கானல் நீரான’ ரயில்வே மேம்பாலத் திட்டம்: வாகன நெரிசலில் நெட்டவேலாம்பாளையம் மக்கள்

ரயில்வே மேம்பாலம் அமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தும், திருச்செங்கோடு அருகே நெட்டவேலாம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்.

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் நெட்டவேலாம்பாளையத்தில் அடுத்தடுத்து இரு இடங்களில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் நெட்டவேலாம்பாளையத்தில் திருச்செங்கோடு-குமாரபாளையம் செல்லும் பாதையின் இடையில் கேரளா-சென்னை செல்லும் ரயில்வே பாதை உள்ளது. இப்பாதையில் அடுத்தடுத்த இரு இடங்களில் (50 மீட்டர் இடைவெளியில்) ரயில்வே கிராஸிங் உள்ளன. இந்த ரயில் பாதை வழியாக ஒரு மணி நேர இடைவெளியில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இவ்வாறு ரயில்கள் செல்லும் நேரத்தில் ரயில்வே கேட் மூடுவதால், திருச்செங்கோடு - குமாரபாளையம் சாலையை வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த சில ஆண்டு களுக்கு முன்னர் அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டது. அதன் பின்னர் திட்டத்தைச் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை. இதனால், இச்சாலையில் ரயில்வே கேட் மூடும் நேரங்களில் வழக்கம்போல வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: திருச்செங்கோடு-குமாரபாளையம் செல்லும் பிரதான சாலை வழியாக தினசரி அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் ஏராளமானவை கடந்து செல்கின்றன. ரயில்வே கேட் மூடும் நேரங்களில் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரயில்வே பாலம் கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் அடுத்தடுத்துள்ள இரு ரயில்வே கேட்டில் இடையில் மேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x