Published : 16 Oct 2023 03:38 PM
Last Updated : 16 Oct 2023 03:38 PM
மண்ணிவாக்கம்: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களை இணைக்கும் மண்ணிவாக்கம் கூட்டு சாலையில், தொடரும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வண்டலூர்–வாலாஜாபாத் சாலை, முடிச்சூர் சாலை ஆகியவை சந்திக்கும் முக்கியமான இடமாக மண்ணிவாக்கம் பகுதிஉள்ளது. இந்த வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக காஞ்சிபுரம், வேலூர்,ராணிப்பேட்டை, பெங்களூரு செல்லும் வாகனங்களும் திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன. அதேபோல் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் செல்லும் வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றன.
மேலும், சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், மண்ணிவாக்கம் பகுதி வந்து பேருந்து ஏறி செல்கின்றனர். இங்கு ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதி மிகவும் விசாலமாகவும், ரவுண்டானா அமைக்கும் வகையிலும் உள்ளது.
இதனால், சாலையை கடப்பதற்காக வேகமாக வரும்வாகனங்கள் பாதசாரிகள் மீது மோதி விடுகின்றன. இங்கு போக்குவரத்து போலீஸாரும் பணியில் இருப்பதில்லை. எனவே, மண் ணிவாக்கம் கூட்டு சாலை பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்–லெனினிஸ்ட் ) காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ம.பாலாஜிதலைமையில், தாம்பரம் மாநகர காவல் துறையினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ம.பாலாஜி கூறியதாவது: வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து, வாலாஜாபாத் செல்லும் சாலை மற்றும் தாம்பரத்தில் இருந்து வரும் முடிச்சூர் சாலை, மண்ணிவாக்கம் சந்திப்பில் இணைகிறது. அந்த சந்திப்பில் அலுவலகம் மற்றும்பள்ளி நேரங்களில், வாகன போக்குவரத்து மிகவும் அதிகமாக உள்ளது. பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்து அபாயம் அதிகம் உள்ள பகுதியாக இந்த சந்திப்பு உள்ளது.
இப்பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிக்னல் பழுதடைந்து காட்சி பொருளாக காணப்படுகிறது. போக்குவரத்து போலீஸாரும் இங்கு பணியில் இருப்பதில்லை. இதனால் தொடர் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வலியுறுத்தி, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
மேலும், சாலைகளில் 24 மணி நேரமும்போக்குவரத்து காவலர்களை பணியமர்த்துவது சாத்தியமில்லை என்றாலும், வாகன ஓட்டிகளுக்காக தானியங்கி சிக்னல் அமைத்தால் விபத்தை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, விபத்துகளை கட்டுப்படுத்த சாலை பாதுகாப்பு நிதி மூலம் சிக்னல்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. ஆனால் சிக்னல்களை அமைப்பதோடு சரி, அதன்பிறகு அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை. இதன் காரணமாக சாலை பாதுகாப்பு நிதி வீணாகிறது.
எனவே போலீஸார் சிக்னல் தொடர்ந்து செயல்படுகிறதா எனஆய்வு செய்து, ௮வற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் பழுது ஏற்பட்டால் உடனே சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். காலை, மாலை ‘பீக்-ஹவர்’ நேரங்களில் அங்கு போலீஸாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில், மண்ணிவாக்கம்–முடிச்சூர் சந்திப்பு பகுதியில் சிக்னல் மிகவும் தேவையான ஒன்று. அரசிடம் நிதி பெற்று சிக்னல் அமைப்பது காலதாமதமாகும் என்பதால், முக்கிய பிரமுகர்களிடம் நிதி பெற்று சிக்னல் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நிதி கிடைத்தவுடன் சிக்னல் அமைக்கப்படும். அதுவரைவிபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்துபோலீஸார் மற்றும் வேக தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT