Last Updated : 16 Oct, 2023 02:35 PM

 

Published : 16 Oct 2023 02:35 PM
Last Updated : 16 Oct 2023 02:35 PM

சந்திர பிரியங்கா புகார்களை தேசிய பெண்கள் ஆணையம் விசாரிக்க கோரி அமித் ஷாவுக்கு புதுச்சேரி அதிமுக கடிதம்

சந்திர பிரியங்கா | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா கூறிய சாதிய, பாலின ரீதியிலான துன்புறுத்தல் புகாரை, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரியில் பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்துள்ளார். ஒரு வாரமாகியும் இவ்விவகாரத்தில் முழு முடிவு எட்டப்படவில்லை. முதல்வர் ரங்கசாமி இவ்விவகாரம் தொடர்பாக மவுனம் காத்து பதில் தர மறுக்கிறார். இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதுச்சேரி மாநில அதிமுக துணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு (தனி) தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். புதுச்சேரி மாநில பட்டியலின சமூகத்தின் பிரதிநிதியாகவும், காரைக்கால் மாவட்ட மக்களின் பிரதிநிதியாகவும், புதுச்சேரி மாநில பெண்களின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்த அவர் கடந்த 9.10.2023-ம் தேதி அன்று துணைநிலை ஆளுநருக்கு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியிருந்தார்.

40 ஆண்டுக்குப் பின் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் அமைச்சராக பணியாற்றி வந்த சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கும் விஷயம் மிகவும் அதிர்ச்சிக்குரியது. சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் பெரும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், ஆணாதிக்க கும்பலின் அரசியல் சூழ்ச்சிகள், பணம் என்ற பெரிய பூதத்துடன் போராடுவது இயலாத காரியம் என்பதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் அமைச்சருக்கே புதுச்சேரி மாநிலத்தில் பாதுகாப்பில்லாத நிலையை ஆணாதிக்க சக்திகள் உருவாக்கி உள்ளன. பெண் அமைச்சரை சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தவோ, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவோ, புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் முதல்வர், துணைநிலை ஆளுநரும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பெண் அமைச்சர் புகாரின் அடிப்படையில் சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் அவருக்கு துன்புறுத்தல் கொடுத்தவர்கள் யார் என்பதை கண்டறிய பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" என்று வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x