Last Updated : 30 Jan, 2018 08:52 AM

 

Published : 30 Jan 2018 08:52 AM
Last Updated : 30 Jan 2018 08:52 AM

இந்திய அஞ்சல் துறை இணையதள வங்கி சேவை: நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் அமல்படுத்த முடிவு

அஞ்சலக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இந்திய அஞ்சல் துறை தனது இணைய தள வங்கி சேவையை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் நாடு முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் இயங்குகின்றன. வங்கி கிளை கள் இல்லாத தொலைதூர குக் கிராமங்களில் கூட அஞ்சல் நிலையங்கள் உள்ளன. தபால் மற்றும் பார்சல் சேவை மட்டுமின்றி சேமிப்பு கணக்கு, ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் அஞ்சல் துறை காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது.

பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களது சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் வரை நிர்ணயித்துள்ளன. ஆனால், அஞ்சல் துறை யில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வெறும் ரூ.50 இருப்புத் தொகை வைத்திருந்தால் போதும். காசோலை பயன்படுத்துவோருக்கு ரூ.500 இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

1,000 ஏடிஎம் மையங்கள்

மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாடு முழுவதும் சுமார் 1,000 ஏடிஎம் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தாண்டு கூடுதலாக ஆயிரத்துக்கும் அதிகமான புதிய ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட உள் ளன.

இதனிடையே, இந்திய அஞ்சல் துறை தனது இணைய தள வங்கி சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அஞ்சல் துறையில் `நெட் பேங்கிங்’ மற்றும் ‘மொபைல் பேங்கிங்’ சேவைகளைத் தொடங்குவதற்கான சோதனை முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்காக, நாடு முழுவதும் ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் குறிப்பிட்ட அஞ்சல் துறை அதிகாரிகளின் கணக்குகளைக் கொண்டு சோதனை முறையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘மொபைல் பேங்கிங்’ சேவைக்காக பிரத்தியேக ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையதள வங்கி சேவைகளை மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். மேலும், அஞ்சலக டெபிட் கார்டுகளை ஆன்-லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x