Published : 15 Oct 2023 05:31 PM
Last Updated : 15 Oct 2023 05:31 PM

இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் ஜெய்ஸ்ரீராம் - உதயநிதிக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்

நாராயணன் திருப்பதி (இடது), உதயநிதி ஸ்டாலின் (வலது)

சென்னை: ஜெய்ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். ரசிகர்கள் தங்களுக்கு எது உற்சாகத்தைக் கொடுக்குமோ அந்த கோஷங்களை எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் உரிமையில் தலையிட உதயநிதி யார்? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்ஸ்ரீராம் என்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இருந்த ரசிகர்கள் சொன்னது தவறானது, வெறுப்பானது என்றெல்லாம் கூறியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஜெய்ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். ராமராஜ்ஜியம் என்பதுதான் ஒவ்வொரு இந்தியனின் கனவும்கூட. ரசிகர்களின், மக்களின் நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்க தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாதுதான்.

பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும்போது அந்த நாட்டில் உள்ள ரசிகர்கள் நம் நாட்டு விளையாட்டு வீரர்களை எப்படியெல்லாம் இழிவாக தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்கள் என்பது உதயநிதிக்கு தெரியுமா? பாகிஸ்தானில் நம் நாட்டு வீரர்களை கற்களால் அடித்த நிகழ்வுகள் உதயநிதிக்கு தெரியுமா? மற்றொரு நாட்டில், உன் அப்பா பெயர் என்ன? என்று நம் நாட்டு வீரர்களை ரசிகர்கள் கேட்டபோது உதயநிதி எங்கிருந்தார்?

நாசகார செயல்களில் ஈடுபடும் ஹமாஸ், ஐஎஸ் உள்ளிட்ட நம் நாட்டில் உள்ள இதர பயங்கரவாத இயக்கத்தினர்கூட அழிவுகளை ஏற்படுத்தும் போது என்ன சொல்கிறார்கள் என்பது உதயநிதி கேள்விப்பட்டிருக்கிறாரா? அது தவறில்லையா? ஒரு மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உதயநிதி கண்டிப்பாரா?

ரசிகர்கள் தங்களுக்கு எது உற்சாகத்தை கொடுக்குமோ அந்த கோஷங்களை எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் உரிமையில் தலையிட உதயநிதி யார்? அந்த ரசிகர்கள் மற்றொரு மதத்தை புண்படுத்தி பேசியிருந்தால் கண்டிப்பதில் நியாயம் உள்ளது.

கோவையில் 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை மத ரீதியாக அடையாளப்படுத்தி பேசுபவர்கள், தங்களின் அணி வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்கு தங்களின் கடவுளை ஜெய்ஸ்ரீராம் என்று போற்றி பாடுவதை கண்டிப்பதற்கு தகுதியில்லை. விளையாட்டு அமைச்சர் விளையாட்டில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நம்பிக்கைகளில் விளையாட வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று (சனிக்கிழமை) நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது பாக்., வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக பார்வையாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் கீழ்த்தரமானது என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x