Published : 15 Oct 2023 09:30 AM
Last Updated : 15 Oct 2023 09:30 AM

“தமிழை போற்றிக்கொண்டே இருப்போம்” - இந்து தமிழ் திசை ஆசிரியர் கே.அசோகன் கருத்து

இந்து தமிழ் திசை ஆசிரியர் கே.அசோகன்

சென்னை: ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘தமிழ் திரு' விருதுகள் வழங்கும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டாக ராம்ராஜ் காட்டன் வழங்கும் 'இந்து தமிழ் திசை - யாதும் தமிழே 2023' விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்புரை ஆற்றியதாவது: தகதகக்கும் சூரியனுக்கும், தங்கமயமாக ஒளி வீசும் நிலவுக்கும் அறிமுகம் தேவையில்லை. அதன் சிறப்புகளை யாரும் பரப்பவும் தேவையில்லை.

தாய்த் தமிழ் மொழிக்கும் அந்த சிறப்பு உண்டு. இருந்தாலும் சில விஷயங்களை உடற்பயிற்சி போன்று தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். தமிழின் புகழை இன்னொருவர் கூறி தமிழ் வளர வேண்டியதில்லை, வாழ வேண்டியதில்லை. ஆனாலும் இறைவனையும், இயற்கையையும் போற்றுவதைப் போல தாய் மொழி தமிழையும் போற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போதுதான் அம்மொழி மென்மேலும் செழுமையையும், சிறப்பையும் அடையும். இதில் ஒரு நாளிதழாக இணைந்து, செய்தி வெளியிடுவது மட்டும் நமது வேலை என்று நின்றுவிடாமல், நமக்கு சோறு போடுகின்ற, நமக்கு வாழ்வளிக்கின்ற தாய்த் தமிழுக்கு வேறு எப்படி எல்லாம் மரியாதை செய்ய முடியும் என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த ‘தமிழ் திரு' விருது வழங்கும் விழா.

இவ்விழா, தமிழாய்ந்த அறிஞர்களை வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் எப்படி கவுரவப்படுத்த முடியும் என்று பார்த்து, அவர்களுக்கு உரிய கவுரவத்தை செய்வதற்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டது இல்லை. இந்த அறிஞர்கள் ஏதோ ஒரு வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் சேர்ந்து பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மூலம் தமிழ் மொழியின் சிறப்பை அறிவியல் தமிழாக, வரலாற்று தமிழாக,

இலக்கிய தமிழாக கூற, நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறோம். வாசகர்களாகிய நீங்கள் தான் எங்களை ஆளும் மன்னர்கள். ‘இந்து தமிழ் திசை’யின் இந்த 10 ஆண்டுகளில் திரும்பத் திரும்ப செதுக்கி செதுக்கி நாளிதழை வழி நடத்தியவர்கள் நீங்கள் தான்.

நாளிதழ் குறித்த நிறை, குறைகளை தெரிவிக்க. ‘உங்கள் குரல்’ என்ற குரல் பதிவு சேவையை வழங்கி வருகிறோம். இந்நாளிதழ் என்றென்றும் சிறப்புடன் பயணிக்க வாசகர்களின் வாழ்த்துகள் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x