Published : 15 Oct 2023 07:15 AM
Last Updated : 15 Oct 2023 07:15 AM
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் வியூகம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் சோனியா காந்தி சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மாநில மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சோனியாகாந்தி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டபோது, தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. அது தொடர்பாக கோப்புகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் நியமனம் நடைபெறவில்லை.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த தினேஷ் குண்டுராவ், கர்நாடக அமைச்சரான நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய பொறுப்பாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் கட்சி வளர்ச்சி அடைய பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் அடிக்கடி தமிழகம் வர வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும், 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் மக்கள் விரோத நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பொதுக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் கையில் எடுத்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மக்களவை தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக பயணித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள், அனைத்துவாக்குச்சாவடிகளுக்கும் குழு அமைக்கும் பணிகள், தமிழகத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக நிர்வாகிகளிடம் சோனியா காந்தி ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்த ஆலோசனை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, மகளிர் இடஒதுக்கீடு, ஓபிசி பிரிவினருக்கான உரிமை வழங்குதல் குறித்து பேச அழைத்ததாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனம் நாச்சியப்பன், மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன், எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT