Published : 14 Oct 2023 05:07 PM
Last Updated : 14 Oct 2023 05:07 PM
புதுச்சேரி: “சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு தொடர்பாக பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறிய: “என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது ராஜினாமாவை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். முதல்வர் ரங்கசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் பதவியிலிருந்து சந்திர பிரியங்காவை நீக்கிவிட்டு, திருமுருகனை அமைச்சர் பதவியில் நியமிக்க ஆளுநரிடம் பரிந்துரை கொடுத்தார். அதற்கான ஒப்புதல் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ளது.
இதையறிந்த சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் என நான் கூறியிருந்தேன். சந்திர பிரியங்காவை கலந்து பேசாமல், அவரிடம் ராஜினாமா கடிதத்தை பெறாமல், அவரை டிஸ்மிஸ் செய்யவும், அந்த இடத்தில் திருமுருகனை அமைச்சராக நியமிக்கவும் பரிந்துரையை ஆளுநர் தமிழிசை மூலம் முதல்வர் ரங்கசாமி உள்துறை அமைச்சரகத்துக்கு அனுப்பினார்.
சந்திர பிரியங்கா தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமும், நானும் பேட்டியளித்தோம். அதற்கு ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு சந்திர பிரியங்கா அமைச்சர் செயல்பாடுகளில் முதல்வர் அதிருப்தி தெரிவித்தார். அதை அவரிடம் கூறினேன். 6 மாதமாக அவர் திறமையாக செயல்படாததால் பதவி நீக்கம் செய்ய கோப்பை முதல்வர் கொடுத்தார், உள்துறை அமைச்சகத்துக்கு நான் அனுப்பினேன். முதல்வர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை என தமிழிசை கூறியுள்ளார்.
தமிழிசை புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துள்ளார். முதல்வருக்கும், ஆளுநருக்கும் நடந்த உரையாடல்கள், முதல்வர் கொடுத்த கடிதம் போன்றவற்றை ஆளுநர் தமிழிசை வெளியில் சொல்வது ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டதற்கு எதிரானது, முரண்பாடானது. முதல்வர் அனுப்பிய கோப்பை டெல்லிக்கு அனுப்பி ஒப்புதல் வந்த பிறகு அதுதொடர்பான அறிவிப்பை மட்டுமே மாநில அரசிதழில் வெளியிட வேண்டும். இதுதொடர்பாக பேட்டி அளிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ரகசியகாப்பு பிரமாணத்துக்கு எதிரானது.
ஆகவே, தார்மிக பொறுப்பேற்று தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யும் முன்பே முதல்வர் அவரை பதவிநீக்கம் செய்துவிட்டார் என்று கூறுகிறார்.
ஆனால், இது சம்பந்தமாக முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. சந்திர பிரியங்காவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
சந்திர பிரியங்கா அமைச்சரவை மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். நான் சாதிரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளேன். ஆண் வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுக்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்த்து என்னால் செயல்பட முடியவில்லை என்று மன உளைச்சலுடன் தன்னுடைய கடித்ததில் எழுதியிருக்கிறார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதுபோன்ற கடிதத்துக்கு புதுச்சேரி அரசில் இருந்து யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதில் முதல்வர் ரங்கசாமி தான் முதல் குற்றவாளி. பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் பொதுப் பணித்துறை ஊழல் பகிரங்கமாக வெளியே வருகிறது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2650 கோடி கடன் வாங்கி அதை வைத்து சாலைகள், வாய்க்கால் கட்டும் திட்டங்களை செய்து வருகின்றனர். இதில் 30 சதவீத கமிஷன் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பங்கு போட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பகிரங்க ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை” என்று நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT