Published : 14 Oct 2023 04:15 PM
Last Updated : 14 Oct 2023 04:15 PM
மதுரை: ‘அரசியல் லாபத்துக்காக கோயிலை பயன்படுத்தக் கூடாது’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் ஜெய ஆனந்த் என்ற கர்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனது எக்ஸ் வலைதள பக்கத்தில், கடந்த மாதம் திருச்செந்தூர் கோயில் புனரமைப்பு பணிகள் குறித்த புகைப்படங்களை பதிவிட்டு, முருகன் கோயில் ராஜகோபுரத்தில் பதிக்கப்பட்டுள்ள பழமையான கருங்கற்கள் எடுக்கப்பட்டு, அதற்குப் பதிலாக டைல்ஸ் கற்கள் பதிக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.
இதையடுத்து சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு அறநிலையத் துறைக்கு எதிராக அவதூறு பரப்பியதாக என்னை அர்ச்சகர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். என்னை இடை நீக்கம் செய்வதற்கு முன்பு என்னிடம் விளக்கம் கேட்கப்படவில்லை. பணியிடை நீக்கத்தால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நான் ஏற்கெனவே தெரிவித்த கருத்து தவறு என நான் பதிவிட்டுள்ளேன். அந்தப் பதிவு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பணியிடை நீக்கத்தை ரத்து செய்தும், அதுவரை உத்தரவை செயல்படுத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ் வாதிடுகையில், "மனுதாரர் பாஜக நிர்வாகியாகவும் உள்ளார். அதை வைத்து எக்ஸ் வலைதளத்தில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார். கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து கொண்டே சமூக வலைதளங்களில் கோயில் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்" என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் அரசியல் செய்வதற்கான இடம் அல்ல. கோயில் குறித்த தவறான பதிவுகள் மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை உருவாக்கும். மனுதாரரின் செயலை மன்னிக்க முடியாது. கோயிலில் பணிபுரிந்து கொண்டே எப்படி அந்த கோயிலுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்ப முடியும்? அரசியல் லாபத்துக்கு கோயிலை பயன்படுத்துவதா? மனுதாரர் பணியிடை நீக்கத்து தடை விதிக்க முடியாது. மனு குறித்து அறநிலையத் துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT