Published : 14 Oct 2023 05:16 AM
Last Updated : 14 Oct 2023 05:16 AM
சென்னை: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் கோ-வாரன்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பழநி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், திண்டுக்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவருமான ஏ.சுப்புரத்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கோ-வாரன்டோ மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கும் பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகமுதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தனது கல்வித் தகுதி மற்றும் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதுபோன்ற விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு முழுமையாகத் தெரிவிக்காமல் மறைப்பது என்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தீவிரமான குற்றமாகும். அதுமட்டுமின்றி, நடத்தை விதிமீறலும் கூட.
அதேபோல, கடந்த 2016-17 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் தனது வருமானத்தையும் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுவில் உண்மைத் தகவல்களை மறைத்தால், அந்த மக்கள் பிரதிநிதியை தகுதி நீக்கம் செய்யலாம் என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பழனிசாமியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகளும் முறையாகப் பரிசீலிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எனவே, அவர் எந்த தகுதியின் அடிப்படையில் எடப்பாடி தொகுதி எம்எல்ஏ-வாகவும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், அவரை தகுதி நீக்கம் செய்து, அவர் இதுவரை பெற்றுள்ள ஊதியம் மற்றும் இதர அரசு சலுகைகளைத் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT